முகமது ஷமியின் சாதனையின் எதிரொலி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பூர்வீக கிராமத்தில் ஒரு மினி ஸ்டேடியமும், உடற்பயிற்சிக்கூடமும் அமைக்கப்பட உள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.
இவரது பூர்வீக கிராமம் உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் உள்ளது. அந்த கிராமத்தின் பெயர் ஷஹாஸ்பூர் அலிநகர். இங்கு ஒரு மினி ஸ்டேடியம், உடற்பயிற்சிக் கூடமும் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்கான பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தியாகி அனுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 விளையாட்டு அரங்கங்கள் கட்டுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் கிராமத்தில் மினி ஸ்டேடியமும், உடற்பயிற்சிக்கூடமும் கட்டப்பட உள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்கிறார் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தியாகி.
வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 ஆட்டங்களில் பங்கேற்று 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது அதிக விக்கெட் எடுத்துள்ளவரும் இவர்தான்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலக கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
எனினும் ஹர்திக் பாண்டியா காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றார்.