

விளையாட்டு உலகில் ஒரு எழுதப்படாத விதி உண்டு. ஒரு வீரருக்கு வயது கூடினாலோ, அல்லது தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலோதான் ஓய்வை அறிவிப்பார்கள். ரசிகர்கள் இவன் எப்படா போவான்? என்று சலித்துக் கொள்ளும் வரை சிலர் விளையாடுவார்கள். ஆனால், வரலாறு படைத்த சில ஜாம்பவான்கள், தங்கள் கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட 5 முக்கிய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
1. ஏபி டிவில்லியர்ஸ் (South Africa): மைதானத்தின் எந்த மூலைக்கும் பந்தை விரட்டும் இந்த "ஏலியன்", 2018-ல் ஓய்வை அறிவித்தபோது உலகமே அதிர்ந்தது. அப்போது அவருக்கு வயது 34 தான். ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் மட்டும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்து 800 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார்.
ஐபிஎல்-லிலும் ஆர்சிபி அணிக்காக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். "எனக்கு டயர்ட் ஆகிவிட்டது, பெட்ரோல் தீர்ந்துவிட்டது" என்று அவர் காரணம் சொன்னாலும், நிர்வாகப் பிரச்சினைகளும் ஒரு காரணம் எனப் பேசப்பட்டது. ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போதே ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டுச் சென்றவர் இவர்.
2. பிரண்டன் மெக்கல்லம் (Newzealand): இன்றைய அதிரடி கிரிக்கெட்டுக்கு வித்திட்டவர். 2015 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை நியூசிலாந்தை அழைத்துச் சென்ற கேப்டன். 2016-ல் தனது 34-வது வயதில் ஓய்வு பெற்றார். அதுவும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை 54 பந்துகளில் விளாசிவிட்டு கெத்தாக வெளியேறினார். 2015 உலகக்கோப்பை தோல்வி மற்றும் சூதாட்ட புகார் தொடர்பான விசாரணைகள் அவரை மனதளவில் பாதித்திருந்தாலும், பேட்டிங்கில் அவர் ஒரு ஃபயராகவே விடைபெற்றார்.
3. கிளென் மெக்ராத் (Australia): பேட்ஸ்மேன்களின் சிம்மசொப்பனம். 2007 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோது, அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 'தொடர் நாயகன்' விருது பெற்றவர் இவர்தான். உலகக்கோப்பையை கையில் ஏந்தியபடியே, தனது கடைசி பந்திலும் விக்கெட் எடுத்துவிட்டு, "இதற்கு மேல் சாதிக்க என்ன இருக்கிறது?" எனத் தலையை உயர்த்திப்பிடித்து வெளியேறினார்.
4. குமார் சங்கக்கரா (Srilanka): இலங்கையின் ரன் மெஷின். 2015 உலகக்கோப்பையில் அடுத்தடுத்து 4 சதங்களை விளாசி உலக சாதனை படைத்தவர். அந்தத் தொடரில் மட்டும் 541 ரன்கள். ஒரு பேட்ஸ்மேன் இதைவிடச் சிறந்த ஃபார்மில் இருக்க முடியுமா? இலங்கை கிரிக்கெட் வாரியம் "இன்னும் கொஞ்ச நாள் விளையாடுங்கள்" என மன்றாடியும், "நான் போக வேண்டிய நேரம் இதுதான்" என்று கறாராகச் சொல்லிவிட்டு 38 வயதில் ஓய்வு பெற்றார்.
5. சவுரவ் கங்குலி (India): இந்திய கிரிக்கெட்டின் தாதா. 2007-ல் இந்திய அணியின் கேப்டன்சியை இழந்திருந்தாலும், பேட்ஸ்மேனாக வெறித்தனமான ஃபார்மில் இருந்தார். அந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் 61 சராசரியும், ஒருநாள் போட்டிகளில் 1200 ரன்களும் குவித்திருந்தார். ஆனால் கிரேக் சேப்பலுடனான மோதல் மற்றும் அணியின் அரசியல் காரணமாக, யாராவது நம்மை அணியிலிருந்து நீக்கும் முன், நாமே ராஜாவாக வெளியேறுவோம் என கம்பீரமாக ஓய்வை அறிவித்தார்.
பொதுவாக சினிமாக்களில்தான் ஹீரோக்கள் கைத்தட்டல்களுக்கு நடுவே விடைபெறுவார்கள். ஆனால் இந்த வீரர்கள் நிஜ வாழ்விலும் அதைச் செய்து காட்டினார்கள். எப்போது போவார்? என்று மற்றவர்கள் கேட்கும் முன், ஏன் போகிறார்? என்று கேட்கும் வகையில் ஓய்வு பெறுவதே ஒரு வீரனுக்கு அழகு. அதை இந்த 5 ஜாம்பவான்களும் மிகச்சிறப்பாகச் செய்து, தங்கள் பெயரை வரலாற்றில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.