
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது.
பறக்கவிடும் சிக்ஸர்கள் மற்றும் அபாரமான பினிஷிங் திறன்களுக்கு பெயர் பெற்றவர் லெஜண்டரி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி. மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் தான் ரசிகர்கள் ஏராளம். சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியை காண வரும் ரசிகர்களை விட ‘தல’ தோனி விளையாடுவதை ரசிப்பதற்கு வரும் ரசிகர்கள் தான் அதிகம். அவருக்கு புகழ்பெற்ற அந்தஸ்து இருந்தபோதிலும், ‘தல’ தோனி விளையாட்டில் மிகவும் அர்ப்பணிப்புள்ள வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் 400-வது ஆட்டத்தில் ஆடிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 25-வது வீரர் டோனி ஆவார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வி கண்டது.
நடிகர் அஜித் மற்றும் தோனியை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்ற அழைப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த போட்டியை காண ‘தல’ அஜித் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளிநாட்டில் கார் ரேஸில் பிசியாக இருந்த நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பு தனது 25-வது திருமண நாளை முன்னிட்டு இந்தியா வந்தார். இதனையடுத்து அஜித்-ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே, ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண நம்ம ‘தல’ அஜித் அவருடைய மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவுடன் உடன் வந்து கண்டுகளித்தார். நடிகர் அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் தல, தல என்று உற்சாகமாக கூச்சலிட்டனர். அஜித்தும் ரசிகர்களுக்கு கையை அசைத்து விட்டு, அவரின் இருபக்கமும் மகள் மற்றும் மனைவியுடன் இருக்கையில் அமர்ந்து போட்டியை ரசித்து பார்த்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்த போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதுதொடர்பாக வீடியோவும், புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேப்பாக் மைதானத்தில் 'தல' தோனி மற்றும் அஜித் (ஏ.கே) இருவரையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில், ரசிகர்கள் தல, தல என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.