

மனிதனின் உடல்திறன், மனவலிமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேகமும், துல்லியமும் ஒன்றாக இணைந்த அபூர்வமான விளையாட்டு பையாத்லான் ஆகும். பனிப்பரப்பில் ஸ்கீயிங் செய்து ஓடிக்கொண்டே, குறிப்பிட்ட இடைவெளிகளில் குறி வைத்து சுடும் இந்த விளையாட்டு உலகின் கடினமான குளிர்கால விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பையாத்லான்(Biathlon) என்றால் என்ன?
பையாத்லான் என்பது இரண்டு விளையாட்டுகளின் ஒருங்கிணைப்பாகும். அவை கிராஸ்-கண்ட்ரி ஸ்கீயிங் (Cross-country Skiing), ரைஃபிள் சுடுதல் (Rifle Shooting). இந்த விளையாட்டில் வீரர்கள் பனியால் மூடப்பட்ட நிலப்பரப்பில் ஸ்கீ அணிந்து வேகமாக ஓட வேண்டும். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, அவர்கள் சுடும் நிலையத்தில் நிறுத்தி, ஐந்து இலக்குகளை துல்லியமாக குறி வைத்து சுட வேண்டும். ஓட்டத்தின் வேகமும், சுடும் துல்லியமும் வெற்றிக்கான முக்கிய காரணிகளாகும்.
வரலாறு: பையாத்லான் விளையாட்டின் தோற்றம் வட ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற குளிர் பகுதிகளில் ஏற்பட்டது. பண்டைய காலங்களில் இந்த விளையாட்டு வேட்டையாடுதல், இராணுவப் பயிற்சி ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தது. பனிப்பரப்புகளில் வேகமாக நகர்ந்து, இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் இராணுவ வீரர்களுக்கு அவசியமாக இருந்தது.1924 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பையாத்லான் அறிமுகமானது.1960 ஆம் ஆண்டு முதல் இது அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. காலப்போக்கில் பெண்களுக்கும் இந்த விளையாட்டு அனுமதி வழங்கப்பட்டது.
பையாத்லான் விளையாட்டு நடைமுறை: பையாத்லான் போட்டிகள் பொதுவாக பின்வரும் முறையில் நடைபெறும். வீரர்கள் பனிப்பாதையில் ஸ்கீயிங் செய்து ஓடத் தொடங்குவர். குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு சுடும் மையம் இருக்கும். ஒவ்வொரு முறையும் 5 இலக்குகளை குறி வைத்து சுட வேண்டும். சுடுதல் இரண்டு நிலைகளில் நடைபெறும். 1.படுக்கை நிலையில் (Prone position), 2. நின்ற நிலையில் (Standing position),
தண்டனை விதிகள்: ஒரு இலக்கை தவறவிட்டால் கூடுதல் தூரம் ஓட வேண்டும் (Penalty Loop) அல்லது கூடுதல் நேரம் சேர்க்கப்படும்.
பல்வேறு வகைகளில் நடத்தப்படுகிறது:
Individual போட்டி – நீண்ட தூரம், அதிக துல்லியம் தேவை
Sprint போட்டி – குறுகிய தூரம், வேகமான நடை
Pursuit போட்டி – முன் போட்டியின் முடிவை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்
Mass Start – அனைத்து வீரர்களும் ஒரே நேரத்தில் தொடங்கும் போட்டி
Relay (குழு போட்டி) – குழுவாக கலந்து கொள்ளும் போட்டி
ஒவ்வொரு போட்டி வகையிலும் தூரம், சுடும் முறை மற்றும் தண்டனை விதிகள் மாறுபடும். பையாத்லான் விளையாட்டில் சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஸ்கீ மற்றும் ஸ்கீ குச்சிகள் சிறிய ரைஃபிள் (வீரரின் முதுகில் கட்டி எடுத்துச் செல்லப்படும்), குளிர் தடுக்கும் உடை, கையுறை, கண்ணாடி, காலணிகள், இந்த உபகரணங்கள் வீரர்களின் பாதுகாப்பிற்கும் செயல்திறனுக்கும் உதவுகின்றன.
பையாத்லானின் முக்கியத்துவம்: உடல் சக்தி, மன ஒருமைப்பாடு, கவனம் மற்றும் துல்லியம், பொறுமை மற்றும் ஒழுக்கம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சுடும் நேரத்தில் முழுமையான அமைதி அவசியம் என்பதால் மன கட்டுப்பாடு மிக முக்கியமாகிறது.
இந்தியாவில் பையாத்லான் அதிகம் பரவலாக இல்லை. காரணம் பனிப்பரப்புகள் குறைவாக இருப்பது, தேவையான வசதிகள் இல்லாமை. எனினும் லடாக், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் போன்ற பகுதிகளில் பையாத்லான் பயிற்சிகள் மெதுவாக வளர்ந்து வருகின்றன. வேகமும் அமைதியும் ஒன்றாக இணையும் இந்த விளையாட்டு, வீரர்களை ஒழுக்கம், பொறுமை மற்றும் தைரியத்தில் சிறந்தவர்களாக உருவாக்குகிறது.