

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் இடம் பெற்றிருந்தார். அவரை ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு அந்த அணி நிர்வாகம் வாங்கியிருந்தது. 19-வது ஐ.பி.எல். சீசனுக்கு தேர்வான ஒரே வங்காளதேச வீரர் இவர் தான்.
இதற்கிடையே, சமீபத்தில் வங்காளதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இந்துக்கள் சிலர் கொடூரமாக கொல்லப்பட்டதால் இந்தியா- வங்காளதேச உறவில் விரிசல் ஏற்பட்டது. வங்காளதேசத்தில் நிகழும் இந்தியர்களுக்கு எதிரான தொடர் வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக அந்த நாட்டை சேர்ந்த வீரர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்பினரும், பா.ஜனதா கட்சியினரும் வலியுறுத்தியதுடன், அவரை வாங்கிய கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கானுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை ஐ.பி.எல். அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்த வங்காளதேசம் பதிலடியில் இறங்கியுள்ளது. அதன் முதல் பகுதியாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டோம் என்றும் எங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் தெரிவித்துள்ளது.
அதாவது, 20 அணிகள் இடையிலான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டி போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் வங்காளதேச அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கொல்கத்தா (பிப்.7 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பிப்.9-ந்தேதி இத்தாலிக்கு எதிராக, பிப்.14-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் மும்பையில் (பிப்.17-ந்தேதி நேபாளத்துக்கு எதிராக) நடக்கிறது. அந்த ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றும்படி வங்காளதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஆட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் நிறைய நடைமுறை சிக்கல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. .
இதனால் உலகக் கோப்பை போட்டியில் வங்காளதேச அணி கலந்து கொள்ளுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது
எந்தவிதமான தெளிவான அல்லது நியாயமான காரணமும் சொல்லாமல், தங்கள் நாட்டு வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டதை வங்கதேச அரசு கடும் அவமானமாகக் கருதியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே வங்காளதேசத்தில் மறு உத்தரவு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் மற்றும் அது தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவும் காலவரையற்ற தடை விதித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிஜூர் ரகுமான் விடுவிக்கப்பட்ட விவகாரம், தற்போது விஸ்வரூபம் எடுத்து இரு நாட்டு கிரிக்கெட் உறவையே கேள்விக்குறியாக்கியுள்ளது.