கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் அவுட்டில் இருந்த தேவ்தத் படிக்கல் சரவதேச தொடர்களிலும் விளையாடாமல் இருந்தார். ஆனால் இப்போது ரஞ்சி கோப்பையில் அதி விரைவாக ரன்களை எடுத்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
2018ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான தேவ்தத் படிக்கல் 2019ம் ஆண்டு தனது திறமையான ஆட்டத்தால் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அறிமுகமானார். தனது முதல் அறிமுக தொடரிலேயே முதல் நான்கு போட்டிகளில் மூன்று அரைசதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தவகையில் சர்வதேச அளவில் இந்திய அணியில் 2021ம் ஆண்டு அறிமுகமானார். அதுதான் அவரின் முதல் மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டியாகும். 21 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர் சில காலங்களில் ஃபார்ம் அவுட் ஆனார். இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படிக்கல் லக்னோ அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் தேவ்தத் படிக்கல், தொடக்கம் முதலே வெறித்தனமாக விளையாடி வருகிறார். இதுவரை இவர் இந்த தொடரில் மூன்று சதங்களை அடித்து தனது கம்பேக்கை கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிய ரஞ்சி போட்டியில் 151 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாளை இதன் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணியே வெற்றிபெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு குறை என்னவென்றால், விராட் இல்லாததுதான். தன் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இந்த முறைத்தான் விராட் ஒரு டெஸ்ட் தொடரில் எந்த போட்டிகளிலுமே விளையாடமல் இருக்கிறார்.
மேலும் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாடப்போவதில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் வரிசையில் ஆட்கள் குறைவாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஞ்சி கோப்பையில் தனது அசாதரணமான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் மீண்டும் தன் பக்கம் திருப்பிய படிக்கல், பிசிசிஐ-யையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இதனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தேவ்தத் படிக்கல் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார். அதாவது கே.எல்.ராகுலுக்கு மாற்றுவீரராக படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் படிக்கல் இணையத்தை ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது.