ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் என்னென்ன ஆலோசனைகள் செய்யப்பட்டன என்ற செய்திகள் கசிந்து வருகின்றன. அந்தவகையில் ஜெய்ஷா அனைத்து அணிகளையும் கலைத்துப்போட்டால்தான் சுவாரசியமே என்று பேசியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டு இறுதியில் எப்போதும் மெகா ஏலம் நடைபெறும். ஆனால், இந்தமுறை மெகா ஏலம் வேண்டாம் என்று சில அணிகள் கூறி வருவதாகவும், இம்பேக்ட் ப்ளேயர் தேவையா? என்பது குறித்தும் முதன்மையாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், “முதலில் இன்பேக்ட் ப்ளேயர் குறித்து பேசினோம். சிலர் பாசிட்டாவகாவும் சிலர் நெகட்டிவாகவும் கூறி வருகின்றனர். இந்த விதியால் ஆல்ரவுண்டர் தேவை இருக்காது. அதேபோல் இளம் வீரர்களுக்கு அதிகமாகவே வாய்ப்பு கிடைக்கும். மற்றொருபுறம் ஒளிபரப்பாளர்கள் இதற்காக நிறையவே செலவிடுகின்றனர். ஆனால், எனக்கு கிரிக்கெட்தான் முக்கியம். இன்னும் சில நாட்களில் இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்.
பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுவிட்டது. இன்னும் சில சிறிய விஷயங்கள் குறித்தும் பார்க்க வேண்டியுள்ளது. சில அணிகள் தரமான வீரர்களை கொண்டுள்ளதால், மெகா ஏலமே தேவையில்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், அணியை இன்னும் சரியாக கட்டமைக்காத அணிகள் ஏலம் வேண்டும் என்று கூறுகிறார்கள். உண்மையில் அணிகளை கலைத்துப்போட்டு, வீரர்களை மாத்திப் போட்டால்தான் போட்டி சுவாரசியமாக இருக்கும்.
பிசிசிஐ பொறுத்தவரை கன்சிஸ்டன்சி முக்கியம் என்றாலும், ரசிகர்களுக்கு சுவாரசியம் கொடுப்பதும் அவசியம்தான். அதேபோல், ஐபிஎல் முடிந்தவுடன் உலக சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கவுள்ளது. ஐபிஎல் விளையாடுவதால், வீரர்களுக்கு ஓய்வு கிடைக்காது என்று எதுவும் இல்லை. ஏனெனில், இரண்டு தொடருக்கும் நடுவில் 15 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த நாட்களில் ஓய்வெடுத்துக்கொண்டு பயிற்சியிலும் ஈடுபடலாம். சாம்பியன்ஷிப் தொடரில் கட்டாயம் வெற்றிபெறலாம்.” என்று பேசினார்.
8 அணிகளிலிருந்து 10 அணிகளாக மாறிய பின், புது அணிகள் இன்னும் முழுமையாக அணிகளை கட்டமைக்கவில்லை. ஆகையால்தான், மெகா ஏலம் மிகவும் முக்கியம் என்று அந்த அணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.