இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஒழுங்கு நடவடிக்கையா? ராகுல் திராவிட் விளக்கம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 சர்வதேச ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததற்கு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைதான் என்று கூறப்படுவதை இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இஷான் கிஷன் ஓய்வு கோரியதாக ராகுல் திராவிட் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நிர்வாகம் ஏற்றது. அதனால் அவர் அணித் தேர்வுக்கு வரவில்லை. ஓய்வு முடிந்ததும் அவர் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார். அவர் மீது எந்த ஒழுங்குப் பிரச்னையும் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ராகுல் திராவிட் கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது ஏன் என்பது குறித்தும் திராவிட் விளக்கினார். அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை. அணிகளுக்குள் இருக்கும் கடுமையான போட்டிதான் காரணம். அணியில் இடம்பெற பலரும் போட்டியிட்டனர். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.
தனது திறமையை வெளிப்படுத்த அவர் தவறியதால்தான் ஆப்கானுக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. அவர் மீது எந்த ஒழுங்கு பிரச்னையும் என்றார் ராகுல் திராவிட்.