2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலகக் கோப்பை, ஜார்ஜியாவின் படுமியில் உள்ள கிராண்ட் பெல்லாஜியோ ஹோட்டல் & கேசினோவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 107 வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் 90 நிமிடங்களில் 40 நகர்வுகள் , பின்னர் கிளாசிக் நேரக் கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் மற்ற நகர்வுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிளாசிக் நேரக் கட்டுப்பாட்டில் இரண்டு ஆட்டங்கள் உள்ளன, அப்போது ஸ்கோர் சமநிலையில் இருந்தால் வேகமான நேரக் கட்டுப்பாடுகளுடன் டை-பிரெக் போட்டி நடைபெறும்.
ஜூலை 22 , புதன்கிழமை அன்று நடந்த சதுரங்கப் போட்டியின் அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் சீனாவின் முன்னாள் உலக சாம்பியனான ஜோங்கி டானை தோற்கடித்து இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நடந்த மினி போட்டியில் 1.5-0.5 என்ற கணக்கில் திவ்யா வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டியில் இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா தேஷ்முக் படைத்துள்ளார். இந்த சதுரங்க உலகக் கோப்பையில் திவ்யா தொடர்ச்சியாக வெற்றி பெற்று மிகப்பெரிய வெற்றியாளராக இருக்கிறார்.
வரவிருக்கும் இறுதிப் போட்டி , அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பெண்கள் கேண்டிடேட்ஸ் போட்டியில் நுழைவதை உறுதி செய்கிறது. இதனால் நடப்பு மகளிர் உலக சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூவுக்கு எதிரான போட்டியாளரை ஏற்கனவே தீர்மானிக்கிறது. திவ்யா வெள்ளை நிற காய்களை வைத்து சிறப்பாக விளையாடினார். பிஷப்புகளை வைத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் , சிப்பாய்கள் வரை சாதாரண காய்களையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றினார்.
ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஜோங்கி டானுக்கான வாய்ப்புகள் அதிகரித்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்தார் சீனாவின் முன்னாள் செஸ் உலக சாம்பியன். அதனால் திவ்யாவின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. சதுரங்கத்தின் இறுதி ஆட்டம் வந்தபோது திவ்யாவிடம் கூடுதலாக இரு சிப்பாய்கள் இருந்தன.
கடினமாக இருந்த இந்த ஆட்டத்தில் 101 நகர்வுகள் நீடித்தது. இறுதியில் தனது திறனை வெளிப்படுத்தி சீன வீராங்கனையை வழி அனுப்பி வைத்தார் திவ்யா தேஷ்முக். இந்த பெரிய வெற்றியின் மூலம் உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுவிட்டார். திவ்யா இறுதிப் போட்டிக்குத் தயாராகி வருவகிறார்.
இரண்டாவது சதுரங்க அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, முதலிடத்தில் உள்ள சீனாவின் டிங்ஜி லீயுடன் நடந்த ஆட்டத்தை டிரா செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் நேரக் கட்டுப்பாடு கொண்ட டை பிரேக்கர் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.