நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகள், 1896ல் ஏதென்ஸில் தொடங்கின. அதன் பிறகு 1900, பாரிஸ் மற்றும் 1904, செயின்ட் லூயிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்றாலும், இவை அந்த இடங்களில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியாகவே இருந்தன. உலகக் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களில் சிலர், ஒலிபிக்ஸில் கலந்து கொண்டு போட்டியிட்டனர். காலப்போக்கில் முந்தைய ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற பயங்கரமான மற்றும் வினோதமான விளையாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தேர் பந்தயம் (கி.மு. 684 முதல் கி.பி. 393 வரை): கி.மு. 684ல் முதன் முறையாக குதிரைகள் பூட்டப்பட்ட தேர் பந்தயம் ஒலிம்பிக்ஸில் நடைபெற்றது. இது பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், மிகவும் ஆபத்தான விளையாட்டு. இதில் சிறுவர்களும், ஆண்களும் மட்டுமே பங்கு பெற முடியும். 2000 அடி நீளமுள்ள மணல் பாதையைச் சுற்றி ஏழு சுற்றுகள் பந்தயத்தில் ஈடுபடுவார்கள். குறுகலான பாதைகளில் முந்தும்போது, தேர்கள் ஒன்றையொன்று உரசி மோதிக் கொண்டு விபத்துக்கள் நடக்கும். செல்வந்தர் வீட்டுச் சீமாட்டிகள், தேர் பந்தயம் நடத்துபவரை ஆதரிக்க முடியும். அந்தத் தேர் வெற்றி பெற்றால், அந்த வெற்றி, ஆதரித்த பெண்ணைச் சேரும். அந்தத் தேரைச் செலுத்திய வீரரைச் சேராது.
2. பங்க்ரேஷன் (கி.மு. 648 முதல் கி.பி. 393 வரை): குத்துச் சண்டை மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றின் கலவை. பண்டைய கால விளையாட்டுகளில், இது அதிபயங்கரமான விளையாட்டு. இந்தப் போட்டியைப் பற்றிச் சொல்லும்போது, ‘வீரர்கள் இந்தப் போட்டியில் தன்னுடன் மோதுபவரின் கண்ணைக் கூட பறித்து எறியலாம். ஆனால், அவரைக் கடிக்கக் கூடாது’ என்று கூறுவார்கள். இந்தப் போட்டியில், பிரபலமான வீரர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
3. ஹாட் ஏர் பலூன் (1900): பாரிஸில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்ஸ் போட்டி மே மாதம் முதல் அக்டோபர் வரை ஆறு மாதங்கள் நடைபெற்றன. ஆகவே, பல புதிய போட்டிகள் இடம்பெற்றன. இந்த ஹாட் ஏர் பலூன் போட்டியில், எத்தனை உயரத்தில் பலூன் பறந்தது, எத்தனை தூரம் பறந்தது, பலூனிலிருந்து எடுத்த புகைப்படம் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட்டனர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஹென்ரி வால்க்ஸ், 768 மைல் பாரிசிலிருந்து போலந்த் வரை பறந்து வெற்றி பெற்றார். அந்த நேரத்தில், போலந்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே, ஹென்றி, ரஷ்ய அரசு அனுமதி இல்லாமல் போலந்து நாட்டில் நுழைந்த காரணத்தால், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
4. புறா சுடும் போட்டி (1900): புறாக்களைப் பறக்க விட்டு, துப்பாக்கியால் சுடும் போட்டி, 1900 வருடம் மட்டும் நடந்தது. லியான் டி லுன் என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்தவர், 21 புறாக்களைச் சுட்டு வெற்றி பெற்றார். இந்தப் பந்தயத்தில் 300க்கும் அதிகமான புறாக்கள் சுடப்பட்டன.
5. கயிறு இழுக்கும் போட்டி (1900 முதல் 1920 வரை): ஐந்து ஒலிம்பிக் பந்தயங்களில் இந்தப் போட்டி நடந்தது. 1908ம் ஆண்டு, லண்டனின் லிவர்பூலில் நடந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள், பிரிட்டிஷ் வீரர்கள் எடை அதிகமுள்ள பூட்ஸ் அணிந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தினார்கள். இந்தப் போட்டியை, ஒலிம்பிக்ஸில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன.
6. கைத்துப்பாக்கி சண்டை (1906 முதல் 1908 வரை): ஏதென்ஸில் 1906ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியை பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் குழு அங்கீகரிக்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் முதன் முறையாக நடந்த பன்னாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டனர். 1906ம் வருடம் நடந்த கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் நிஜமான மனிதர்களுக்குப் பதிலாக மனித பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 1908ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில், வீரர்கள் மெழுகினால் ஆன தோட்டாக்களுடன் சுடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
7. கலைப் போட்டிகள் (1912 முதல் 1948 வரை): ஓவியம், கட்டடக்கலை, இசை, இலக்கியம், சிற்பக்கலை ஆகியவை 1912ம் வருடம் ஸ்டாக்ஹோமில் நடந்த ஒலிம்பிக்ஸ் பந்தயங்களில் முதல் முறையாக இடம் பெற்றன. ஒருசில விளையாட்டு வீரர்கள், விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி வாகை சூடினர். ஆனால், தொழில் முறை வல்லுநர்கள் இந்தக் கலைப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்ற காரணத்தால் இந்தப் போட்டிகள் ஒலிம்பிக்ஸிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன.