நாக்கின் நிறம் சொல்லுமே உங்கள் உடல் ஆரோக்கியத்தை!

நாக்கின் நிறம் சொல்லும் ஆரோக்கியம்
நாக்கின் நிறம் சொல்லும் ஆரோக்கியம்https://tamil.webdunia.com
Published on

டல் நிலை சரியில்லாதபோது மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பார். ஏனெனில், நாக்கு ஒருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு. அதன் நிறம், அமைப்பு போன்றவற்றில் ஏற்படும் சில மாற்றங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை குறிக்கும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வண்ண மாற்றங்கள்: ஒரு ஆரோக்கியமான மனிதனின் நாக்கின் சாதாரண நிறம் இளம் சிவப்பு. இது நல்ல இரத்த ஓட்டம் மற்றும் ஆரோக்கியமான திசுக்களை குறிக்கிறது. இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் அது உடல் பிரச்னைகளைக் குறிக்கும்.

வெளிறிய நாக்கு: ஒருவருடைய நாக்கு வெளுத்துப் போய் இருந்தால், இரத்தசோகை, ஃபோலிக் அமிலம், பி12 போன்ற வைட்டமின்களின் குறைபாடு மற்றும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக இருக்கலாம். வெளிறிய நாக்கு இரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறையைக் குறிக்கும். இவை திசுக்களின் ஆக்ஸிஜனேற்றத்தைக் குறைக்க வழி வகுக்கிறது.

சிவப்பு நாக்கு: நாக்கு இளம்சிவப்பான நிறத்தில் இல்லாமல், நல்ல பிரகாசமான சிவப்பாக இருந்தால் தொற்று, வீக்கம் அல்லது அதிகரித்த இரத்த ஓட்டத்தின் அறிகுறியாகவோ,  ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நியாசின், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள்  கூட காரணமாக இருக்கலாம்.

ஊதா நாக்கு: இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்தால் நாக்கு நீல நிறமாக மாறும். மேலும், இது சுழற்சி சிக்கல்களை குறிக்கிறது. இதற்கு இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.

மஞ்சள் நாக்கு: ஒருவரின் நாக்கு மஞ்சள் நிறத்தில் தோற்றமளித்தால் மஞ்சள் காமாலை, புகைபிடித்தல், மோசமான வாய் சுகாதாரம் போன்றவை காரணமாக இருக்கும். பாக்டீரியாக்களின் தாக்கம், புகை பிடிப்பதால் ஏற்படும் நிக்கோட்டின் கறை பிலிரூபின்போன்றவை நாக்கில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகின்றன.

கருப்பு நாக்கு: நாக்கில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் அதிகப்படியான வளர்ச்சி, புகைபிடித்தல்,  இறந்த செல்கள் பாதிப்பு, மோசமான வாய் சுகாதாரம், சில மருந்துகளின் பயன்பாடு நுண்ணுயிர் எதிர்ப்புகள் போன்றவை காரணமாக நாக்கு கருப்பு நிறமாக மாறுகிறது.

வெள்ளைப் பூச்சு: நாக்கில் வெள்ளைப் பூச்சு போல படிந்து இருந்தால் அது ஈஸ்ட் தொற்றின் காரணமாக இருக்கலாம். தண்ணீர் குடிக்காமல் ஏற்படும் நீரிழப்பு, மோசமான வாய் சுகாதாரம் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கைக்குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!
நாக்கின் நிறம் சொல்லும் ஆரோக்கியம்

நாக்கு அமைப்பு: சிலருக்கு நாக்கு மிகவும் மென்மையாக இருக்கும். இது தொற்று நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு, பி12 ஃபோலிக் அமிலக் குறைபாடாக இருக்கலாம். சிலருக்கு நாக்கில் முடி இருக்கும். இது இறந்த செல்கள், மோசமான வாய் சுகாதாரம், புகையிலை பயன்பாடு அதிகப்படியான ஆல்கஹால் அல்லது மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் இந்த மாதிரி தோற்றமளிக்கும்.

பிளவுபட்ட நாக்கு: சிலருக்கு நாக்கில் ஆழமான பள்ளங்கள் அல்லது நாக்கு பிளவுபட்டது போல இருக்கும். மரபணு காரணங்கள் மற்றும் டவுன் சிண்ட்ரோம், சொரியாசிஸ் அல்லது நீரிழப்பு  காரணமாக இருக்கலாம்.

வீங்கிய நாக்கு: ஒவ்வாமை எதிர்வினைகள், தொற்றுகள், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஆஞ்சியோடீமா போன்றவை நாக்கு வீக்கத்தை ஏற்படுத்தும்.

புண்கள் உள்ள நாக்கு: சிலருக்கு நாக்கில் புண்கள் தோன்றி இருக்கும். புற்றுப்புண்களாகவோ வைரஸ் தொற்றின் காரணமாகவோ  இவை ஏற்படலாம். சிலருக்கு அதிர்ச்சியின் காரணமாகக் கூட புண்கள் தோன்றக்கூடும்.

நாக்கின் தோற்றத்தில், நிறத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அல்லது கடுமையான வலி, வீக்கம், விழுங்குவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நலம். பல் துலக்கும்போது நாக்கையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். வாயில் ஈரப்பதத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். புகையிலை, மதுவை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com