
கிரிக்கெட்டில் எப்பேற்பட்ட சிறந்த வீரரும், நிச்சயமாக ஒருசில பௌலர்களை எதிர்கொள்ள சிரமப்பட்டிருப்பார்கள். கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் கூட சில பௌலர்களை எதிர்கொண்டு விளையாடுவதில் கஷ்டப்பட்டார். எப்போதும் ஓய்வு பெறும் தருவாயில் தான் வீரர்கள் இதுபற்றிய கருத்துகளைத் தெரிவிப்பார்கள். ஆனால் விராட் கோலி தற்போது தான் எதிர்கொண்ட பௌலர்களில் யார் கடினமானவர்கள் என்பதை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி தனது கிரிக்கெட் பயணத்தில் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி. இருப்பினும் ஐபிஎல், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இன்னும் ஒருசில ஆண்டுகளில் விராட் கோலி ஓய்வு பெறுவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது ஃபிட்னஸ் இன்னமும் குறையவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.
36 வயதாகும் கோலி இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 125 டி20 போட்டிகள், 123 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 302 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். அதோடு 82 சர்வதேச சதங்களை விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டும் 262 போட்டிகளில் விளையாடி 8447 ரன்களைக் குவித்து அசத்தியிருக்கிறார்.
உலக கிரிக்கெட் அரங்கில் 3 வடிவ போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடிய மற்றும் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே வீரர் என்றால் அது விராட் கோலி தான். அதேபோல் 3 வடிவ போட்டிகளின் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஒரே வீரரும் கோலி தான். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும், சில பௌலர்கள் தங்கள் பந்துவீச்சால் கோலியின் ரன் வேட்டையை சற்று குறைத்துள்ளனர். அவ்வகையில் தான் எதிர் கொண்டதிலேயே கடினமான பந்து வீச்சாளர்கள்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்தார் கோலி.
எக்காலத்திற்கும் சிறந்த ஒருநாள் வீரராக விளையாடி வரும் விராட் கோலி, இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் ஆகியோரை ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்கொள்ள சிரமப்பட்டுள்ளார். இதில் மலிங்கா ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகி விட்டன. ரஷித் மட்டும் இன்னமும் விளையாடி வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டார் கோலி. ஆண்டர்சன் கடந்த ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இவர் தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் சுனில் நரைனை எதிர்கொள்ள சிரமப்பட்டுள்ளார் கோலி. சுனில் நரைன் தற்போது கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
மேற்கண்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள விராட் கோலி சிரமப்பட்டாலும், அவர்களின் பந்துவீச்சை எப்படி அணுக வேண்டும் என பயிற்சி எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.