
இந்திய கிரிக்கெட்டில் தற்காலத்தில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் விராட் கோலி, சாதனைகளைத் தகர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். சச்சினின் பல சாதனைகள் விராட் கோலியால் முறியடிக்கப்பட்டது. இன்னும் பல சாதனைகளை விராட் கோலி நிச்சயமாக முறியடிப்பார் என்றே தெரிகிறது. இவரது தொடக்க கால கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. முதல் சீசனில் இருந்து பெங்களூர் அணிக்காக தற்போது வரை விளையாடி வரும் கோலிக்கு, ஐபிஎல் வாழ்க்கை வெற்றிகரமாக தொடங்கியது எப்போது தெரியுமா?
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஒரே அணிக்காக அதிக சீசன்களில் விளையாடிய ஒரே வீரர் விராட் கோலி தான். இவர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதற்கு முக்கிய காரணமே ஃபிட்னஸ் தான். ஃபிட்னஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விராட் கோலி, ஆட்டத்திற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்வார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை மட்டுமே நம்பாமல், ஓடி எடுக்கக் கூடிய ரன்களுக்கும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பார் கோலி.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது, டாப் ஆர்டரில் விளையாட விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே களத்திற்கு வந்தார். இதனால் பேட்டிங்கில் இவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. 2010 ஆம் ஆண்டில் இருந்து தான் நன்றாக பேட்டிங் செய்யத் தொடங்கினார். அதற்குப் பலனாக அடுத்த ஆண்டே 2011 இல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் வரை நம்பர் 3 பேட்ஸ்மேனாக பெங்களூர் அணிக்கு ரன்களைக் குவித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பெங்களூர் அணிக்கு தொடக்க வீரருக்கான பற்றாக்குறை ஏற்படவே, கோலி அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார். போட்டியின் சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கோலி திறமையானவர். போட்டியை முன்னெடுத்துச் செல்வதில் கோலி மற்ற வீரர்களுடன் உறுதுணையாக நிற்பார். தொடக்க வீரராக அதிரடி காட்டி வரும் கோலி, பேட்டிங்கில் ஈகோ இருக்கவே கூடாது எனவும் சமீபத்தில் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஐபிஎல் தொடரானது இருதரப்புக்கும் இடையே நடக்கும் சாதாரண தொடர் அல்ல. பல அணிகள் மோதும் பிரபலமான தொடர். புள்ளிப் பட்டியலில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் தான் ஐபிஎல் சவாலானதாக இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட் நமது திறமையை வளர்க்க துணை நிற்கிறது. தொடக்க காலத்தில் களத்தில் என்னை நிரூபிக்க ஆயத்தமாக இருந்தேன். இருப்பினும் 2011 ஆம் ஆண்டு வரை நான் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு தான், ஐபிஎல் வாழ்க்கையே எனக்கு ஆரம்பமானது. அதற்கு முன்பு வரை சரியான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் ஈகோ பார்க்காமல் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாக விளௌயாட வேண்டியது அவசியமாகும்” என கோலி கூறினார்.
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து விராட் கோலி 13,000 ரன்களைக் கடந்துள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் கோலி தான். இளம் வீரராக களத்தில் நுழைந்தவர், இன்று அனுபவ வீரராக ஜொலிக்கிறார்.