
நவீன கால கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் அறிமுகமான பின்பும் கூட, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஆதரவு இன்றுவரை குறையவில்லை. ஒரு வீரரின் தன்னம்பிக்கையை சோதிக்கும் போட்டி என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பல வீரர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர். அவ்வகையில் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான் அதிகபட்சமாக 200 போட்டிகளில் விளையாடி, 15,921 ரன்களைக் குவித்துள்ளார். அதிக போட்டிகளை விளையாடியவர் சச்சின் என்பதால், இவர் தான் அதிக பந்துகளைச் சந்தித்து இருப்பார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சச்சின் அல்ல என்பது தான் உண்மை. இருப்பினும் அதிக பந்துகளை சந்தித்த வீரர் ஒரு இந்திய பேட்டர் தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தான், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் அதிக பந்துகளை சந்தித்த வீரர். விக்கெட்டுகள் ஒரு முனையில் சரிந்தால், மறுமுனையில் தனது அபாரமான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவில் இருந்து பல போட்டிகளில் மீட்டுள்ளார் டிராவிட்.
இன்றைய காலகட்டத்தில் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடியாக விளையாடி, விரைவிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்து விடுகின்றர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி ஆட வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ராகுல் டிராவிட்டைத் தான் கூற வேண்டும். டிராவிட் களத்தில் இருந்தால், இந்தியா அவ்வளவு எளிதாக தோற்காது என்பது மட்டும் உண்மை. இதற்குச் சான்றாக இவரது புள்ளி விவரங்களைக் கூறலாம்.
1996 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ராகுல் டிராவிட், 164 போட்டிகளில் 286 இன்னிங்ஸில் விளையாடி 13,288 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 63 அரைசதங்களும், 36 சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 31,258 பந்துகளைச் சந்தித்து முதலிடத்தில் இருக்கிறார் டிராவிட். இத்தனைப் பந்துகளையும் இவர் சந்திக்க 44,152 நிமிடங்கள் களத்தில் இருந்துள்ளார். இந்தச் சாதனையை இனி வரும் வீரர்கள் முறியடிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.
சச்சின் டெண்டுல்கர் 29,437 பந்துகளைச் சந்தித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் ஜேக்கஸ் கல்லீஸ் 28,193 பந்துகளைச் சந்தித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியா தவிர்த்து 10 வெளிநாடுகளில் டெஸ்டில் சதமடித்த ஒரே இந்தியர் ராகுல் டிராவிட் தான். சச்சின் கூட இந்த அரிய சாதனையை நிகழ்த்தவில்லை. இது தவிர்த்து 100 ரன்கள் கூட்டணியில் 88 முறையும், 300 ரன்கள் கூட்டணியில் 6 முறையும் பங்களித்துள்ளார் டிராவிட். இந்தச் சாதனையும் இதுவரை முறியடிக்கப்படவில்லை. இதன்மூலம் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதில் மிகச்சிறந்த வீரர் என்றும் டிராவிட் புகழப்படுகிறார்.
டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட், தொடர்ந்து 120 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் சாதனை படைத்திருக்கிறார். டெஸ்டில் டிராவிட்டுக்கு அதிக முறை கூட்டணி அமைக்க உதவியவர் விவிஎஸ் லட்சுமணன். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்டில் ஒரு நாள் முழுக்க விக்கெட்டை இழக்காமல் விளையாடியது மாபெரும் சாதனையாகும். பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராகுல் டிராவிட்டின் பேட்டிங் திறன் என்றென்றும் கிரிக்கெட் உலகில் நிலைத்து நிற்கும்.