
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போது, முன்னாள் வீரர்களின் கவனம் கூட இந்தத் தொடரில் தான் இருக்கும். இவ்விரு அணிகளுக்கு இடையே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் களத்தில் அரங்கேறியுள்ளன. அதில் மிகவும் குறைந்த பந்துகளில் முடிந்த டாப் 5 டெஸ்ட் போட்டிகள் எவை மற்றும் ஆதிக்கம் செலுத்திய அணி எது என்பதை இப்போது காணவிருக்கிறோம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெறுவது வழக்கம். இத்தொடர் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்டது. இத்தொடரில் பெரும்பாலும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகளவில் இருக்கும். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றால் வேகப்பந்து வீச்சாளர்களும், இந்தியாவில் நடைபெற்றால் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது ரன்களைக் குறித்தாலும், பௌலர்களின் ஆட்டம் தான் உண்மையில் பெரிய அளவில் பேசப்படும். ஏனெனில் டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் தானே வெற்றியை ருசிக்க முடியும். அவ்வகையில் பௌலர்கள் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்து, வெகு விரைவிலேயே முடிந்த டெஸ்ட் போட்டிகள் ஏராளம். இதில் டாப் 5 போட்டிகளின் பட்டியல் இதோ.
1. நடப்பாண்டு நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 1031 மட்டுமே. இந்திய ஆஸ்திரேலியா மோதிய இப்போட்டியில் தான் மிகக் குறைந்த பந்துகள் வீசப்பட்டது.
2. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது ஆஸ்திரேலியா அணி. இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இப்போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மீண்டெழுந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 1135 மட்டுமே.
3. கடந்த 2012 இல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3வது டெஸ்டை பெர்த் நகரில் விளையாடியது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி, இன்னிங்க்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகக் குறைந்த பந்துகள் வீசப்பட்ட போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி கிடைத்தது இப்போட்டியில் மட்டுமே. இப்போட்டியில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 1200 மட்டுமே.
4. கடந்த 2004 இல் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய 4வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்து இருந்தாலும, அதிலிருந்து மீண்டெழுந்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதில் நிர்ணயித்த 107 ரன்கள் இலக்கை அடைய விடாமல், ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்தியது இந்தியா. இப்போட்டியில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 1213 மட்டுமே.
5. கடந்த 2020 இல் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி, பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காரணத்தால், இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை 1246 மட்டுமே.