
சமீபகாலமாக நம் இந்திய வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உலக நாட்டு வீரர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் உலக அரங்கில் நிரூபித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட முன்னனி இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ் மற்றும் அர்ஜுன் பாபுடா ஜோடி, தங்கப் பதக்கம் வென்று மற்றொரு சாதனை படைத்துள்ளனர். 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் நடந்த போட்டியில் 58 இணைகள் பங்கேற்றனர்.
இதன் தகுதி சுற்றில் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்த ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான சீனாவின் ஜிபெய் வாங்-லிஹாவ் ஷெங் (635.9 புள்ளி) இணையும், இந்தியாவின் ஆர்யா போர்சி-அர்ஜூன் பபுதா (635.2 புள்ளி) ஜோடியும் இறுதிப்போட்டியில் மோதின.
இறுதி சுற்றில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆர்யா-அர்ஜூன் இணை 17-7 என்ற புள்ளி கணக்கில் வாங்-ஷெங் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருவின் லிமாவில் நடந்த உலகக் கோப்பை போடியில் ஆர்யா, ருத்ராங்ஷ் பட்டீலுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். மற்றொரு இந்திய இணையான இளவேனில்-அங்குஷ் ஜாதவ் (631.8) 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில், மனு பாக்கர் மற்றும் ஆதித்யா மல்ரா ஆகியோரின் கூட்டணி தகுதிச் சுற்றில் 577 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் சுருச்சி சிங் மற்றும் வருண் தோமர் 576 புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பிடித்தனர்.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே சுருச்சி சிங் தங்கப்பதக்கமும், சிப்ட் கவுர் சம்ரா, இளவேனில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர். இந்தியா பதக்க பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.