
இந்தியா சமீபகாலமாக விளையாட்டு போட்டிகளில் உலகநாடுகளுக்கு சாவல் விடும் வகையில் முன்னோறிக்கொண்டிருக்கிறது. உலகளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் நம் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிறுபிக்கும் வகையில் தங்க பதக்கங்களை வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தருகின்றனர்.
அந்த வகையில் உலக, ஒலிம்பிக் சாம்பியன் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 126 பேர் போட்டியிட்டதில் இந்தியாவின் சுருச்சி சிங் உள்பட டாப்-8 இடங்களை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். சுருச்சி 588 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றார். ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்றவரான இந்தியாவின் மனு பாக்கர் 574 புள்ளிகளுடன் 25-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து 8 வீராங்கனைகள் இடையே இறுதிசுற்று நடந்தது. இதில் இலக்கை குறிபார்த்து மொத்தம் 24 ரவுண்டுகள் சுட வேண்டும். 12-வது ரவுண்டுக்கு பிறகு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வீராங்கனை வெளியேற்றப்படுவார்.
இறுதிசுற்றில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் சுருச்சி 15-வது ரவுண்ட் வரை முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சற்று சறுக்கிய அவர் 2-வது இடத்துக்கு இறங்கினார். 22-வது ரவுண்ட் முடிவில் பிரான்சின் கேமிலி ஜெட்ஸிஜெவ்ஸ்கிக்கும், சுருச்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. ஆனால் ஜெட்ஸிஜெவ்ஸ்கி, சுருச்சியை விட 0.5 புள்ளி முன்னணியில் இருந்தார். அதனால் கடைசி இரு ஷாட்டில் துல்லியமாக இலக்கை சுட்டு நிறைய புள்ளிகள் எடுத்தால் மட்டுமே தங்கப்பதக்கத்தை முத்தமிட முடியும் என்ற நிலைமையில் சுருச்சி 23-வது ரவுண்டில் 10.5 புள்ளியும், கடைசி ரவுண்டில் 9.5 புள்ளியும் எடுத்தார்.
அதே நேரத்தில் கடைசி இரு ரவுண்டுகளில் தடுமாறிய ஜெட்ஸிஜெவ்ஸ்கி 9.5 மற்றும் 9.8 புள்ளிகள் வீதமே எடுத்தார். இதனால் நூலிழை வித்தியாசத்தில் அவரை முந்திய சுருச்சி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். சுருச்சி 241.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தினார். ஜெட்ஸிஜெவ்ஸ்கி வெள்ளிப்பதக்கத்துடன் (241.7 புள்ளி) திருப்தி அடைய வேண்டியதாயிற்று. சீனாவின் கியான்சன் யாவ் 221.7 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றார்.
அரியானாவைச் சேர்ந்த 19 வயதான சுருச்சி ஏற்கனவே இந்த சீசனில் பியூனஸ் அயர்ஸ் மற்றும் லிமாவில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது கவுரவமிக்க இந்த போட்டியிலும் முத்திரை பதித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.