ஒரே நாளில் 309 ரன்கள்! – பிராட்மன் படைத்த பிரம்மாண்டமான டெஸ்ட் சாதனைகள் ஒரு பார்வை..!

don bradman
don bradmansource:skysports
Published on

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முறியடிக்க முடியாத பேட்டிங்கில் சராசரி புள்ளிகளை படைத்த ஸர் டான் பிராட்மனின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில தருணங்கள், நிகழ்வுகள், விவரங்கள் பற்றி காண்போம்.

01.. 1948 ஆம் ஆண்டு சரித்திரம் படைத்த டான் பிராட்மன் தலைமையில் இங்கிலந்துக்கு சுற்று பயணம் மேற் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 4 வது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய தேவை 4 ரன்கள். அந்த தருணத்தில் 4 ரன்கள் எடுத்தால் 100 சராசரி டெஸ்ட் ரன்கள் வாய்ப்பு டான் பிராட்மனுக்காக பிரகாசமாக ​​​​​காத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது பிராட்மன் எடுத்து இருந்த ரன்கள் 173* ( நாட் அவுட் ).அப்பொழுது தான் புதிதாக விளையாட வந்த இளம் வீரர் நீல் ஹார்வே ஆடிய முதல் பந்தில் பவுண்டரி அடிக்க அந்த 4 ரன்களால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

5 வது கடைசி டெஸ்டில் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரே லிய அணி ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் ஆடினார்கள். அது தான் டான் பிராட்மனின் கடைசி இன்னிங்ஸ் மற்றும் டெஸ்ட் ஆக அமைந்தது. அவர் எதிர் கொண்டது இரண்டே பந்துக்கள். ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். எனவே அவரது டெஸ்ட் ரன்கள் சராசரி 99.94 என்று முடிவிற்கு வந்தது.

02.. அந்த கால கட்டத்திற்கு உரித்தான எல்லா வகை ஷாட்டுக்களையும் அருமையாகவும், நேர்த்தியாகவும் ஆடக் கூடிய பிராட்மன் பந்துக்களை மேல் நோக்கி அடித்து வான வேடிக்கைகள் காட்டுவதை விரும்பியதில்லை. தரையோடு பந்துக்களை பல திக்குகளிலும் பவுண்டரிகள் விளாசியவர், எப்பொழுதாவது தான் சிக்ஸர்கள் அடித்தார்.அவர் விளையாடிய 80 இன்னிங்ஸ்களில் ( 52 டெஸ்ட்கள் ) 6 சிக்ஸர்கள், 618 பவுண்டரிகள் எடுத்துள்ளார்.

03.. ஒரே நாளில் மூன்று சதங்கள் டெஸ்டில் எடுத்து அசத்திய ரிக்கார்டு இவர் வசம் உள்ளது.இங்கிலாந்தின் லீட்ஸ் டெஸ்டில் ( 11.07.1930) இவர் எடுத்த ரன்கள் 309* . மதிய உணவு இடைவேளை 105* ரன்கள், தேநீர் இடைவேளை 220* நாள் முடிவில் 309*.அடுத்த நாள் இவர் அவுட் ஆனது 334 ரன்கள் ( இது தான் டான் பிராட்மனின் அதிக பட்ச தனி ஸ்கோர் ஆகும்). இவர் இதில் அடித்தது 46 பவுண்டரிகள்.

04.. இங்கிலந்தின் இடது கை சூழல் வீச்சு பவுலர் ஹெட்லே வெரிட்டி டான் பிராட்மனின் விக்கெட்டுக்களை டெஸ்டுக்களில் அதிக முறை வீழ்த்தியுள்ளார். எண்ணிக்கை 8 முறை.

எரிக் ஹோலீஸ் என்ற லெக் ஸ்பின் பவுலர்

ஒரே ஒரு முறை தான் டான் பிராட்மனின்

டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியவர்.

அதுவே டான் பிராட்மனின் கடைசி டெஸ்ட்

விக்கெட்டாக அமைந்தது. பிராட்மன் ரன் எதுவும் எடுக்கவில்லை. 0. அவுட் ஆனது கூகுளி பந்திற்கு.

05.. 1938 ஆகஸ்ட் மாதத்தில் நடைப் பெற்ற ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் லென் ஹட்டன், டான் பிராட்மனின் அதிக பட்ச உலக ரிகார்டு ஒரு இன்னிங்ஸ் ரன்கள் ஆன 334 ஐ கடந்துசென்று 364 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.( 20 ஆண்டுகள் பிறகு மேற்கு இந்திய வீரர் காரி சோபர்ஸ்

365* எடுத்து இதை முறியடித்தார் ). தனது உலக ரிகார்டு 334 ரன்களை கடந்து சென்ற பொழுது ஆஸ்திரேலிய

​​அணியின் கேப்டன் டான் பிராட்மன் கைகளை தட்டி லென் ஹட்டனின் சாதனையை மனதார பாராட்டினார். ஒரு இன்னிங்ஸ் 579 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டான் பிராட்மன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் காயம் காரணமாக பேட்டிங் விளையாடவில்லை ( absent hurt) ஆனால் 2.2 ஓவர் பவுலிங் செய்து 6 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு மெய்டேன் ஓவர் வீசினார்.

06.. இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த டான் பிராட்மன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு ரன்னில் முச்சதத்தை தவற விட்டார். அவர் எடுத்தது 299* (1932 அடிலெய்டு டெஸ்ட் )அதிக பட்சமாக19 சதங்கள் (இரட்டை மற்றும் முச்சதங்கள் உட்பட ) இவர் எடுத்தது இங்கிலாந்து அணிக்கு எதிராக. மேற்கு இந்திய தீவுக்கள் அணி ( இரண்டு சதங்கள் ) தென் ஆப்பிரிக்க அணி ( நான்கு சதங்கள்) இந்திய அணி (நான்கு சதங்கள் )

07.. ஒரு முறை கூட டெஸ்ட் மேட்சில் ஸ்டம்பிங் செய்ய படாதவர் டான் பிராட்மன். பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

08.. 1998 ஆம் வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பேஷாவர் டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் துவக்க வீரராக திகழ்ந்த மார்க் டெய்லர், ஸர் டான் பிராட்மனுக்கு பெரும் மரியாதை செலுத்தும் விதமாக ஒரு செயல் செய்தார். மார்க் டெய்லர் 334 ரன்கள் எடுத்ததும், டான் பிராட்மனின் தனி பட்ட அதிக பட்ச ரன்கள் ஆன 334 ஐ கடந்து சென்று முறியடிக்க விரும்பாமல் ஆஸ்திரேலிய அணியின் இனிங்சை டிக்ளர் செய்தார்.

09.. மெல்போர்ன் மைதானத்தில் அதிக பட்ச ரன்கள் டான் பிராட்மன் எடுத்தது 1671. சராசரி 128.53. பவுண்டரிகள் 133.

10.. இந்திய அணி வீரர்களுக்கு ஒரே ஒரு முறை 5 டெஸ்டுகளில் டான் பிராட்மனுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிட்டியது, 1947 - 48 ஆம் ஆண்டுகள் சுற்றுப் பயணத்தில்.அதில் அவரது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர்கள் விஜய் ஹாசரே (2 ) லாலா அமர்நாத் ( 1) டாட்டு பாட்கர் (1).

நான்காவது அடிலெய்ட் டெஸ்டில் விஜய் ஹாசரே இரண்டு இன்னிங்ஸ்களில் சதங்கள் அடித்தார் . (116 & 145) . அதே டெஸ்டில் கேப்டன் டான் பிராட்மன் இரட்டை சதம் எடுத்தார். ( 201).இந்த டெஸ்டில் அன்றைய மெட்ராஸ் வீரர் ரங்காசாரி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவர் ஒருவர் தான் டான் பிராட்மனுக்கு எதிராக டெஸ்டில் பந்து வீசிய ஒரே ஒரு தமிழக வீரர் ஆவார்.

இந்த சுற்றுப் பயணத்தில் டான் பிராட்மன் நான்கு சதங்கள் விவரங்கள் . பிரிஸ்பேன் (185) மெல்போர்ன் ( 132 & 127* ) அடிலெய்ட் (201) இலங்கை மண்ணில் ஒரு முதல் தர மேட்ச் ஆடியுள்ள ஸர் டான் பிராட்மன் இந்திய மண்ணில் ஒரு ஆட்டம் கூட ஆடாதது குறிப்பிடதக்கது.

இதையும் படியுங்கள்:
பிசிசிஐ-யின் ஒத்துழைப்பு கிடைக்குமா? - 100 சதங்களை எட்ட விராட் கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்..!
don bradman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com