

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைச் சேர்த்து மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார். கிரிக்கெட் உலகில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படும் இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலியால் முடியுமா என்பது தான் கிரிக்கெட் உலகில் தறபோது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று ஃபார்மட்டுகளையும் சேர்த்து விராட் கோலி இதுவரை 85 சதங்களை விளாசியுள்ளார். சதத்திற்கு சதம் கண்ட சச்சினின் மாபெரும் சாதனையை சமன் செய்ய இன்னும் அவருக்கு 15 சதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ரன் குவிப்பில் சற்று சரிவை சந்தித்த கோலி, தற்போது மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை டக் அவுட் ஆனாலும், மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசி அசத்தினார் கோலி.
2027 உலகக்கோப்பை வரை மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்பதால், 100 சதங்கள் என்ற சாதனையை எட்டுவது சற்று கடினமான விஷயம் தான். ஏனெனில் வருகின்ற உலகக்கோப்பையுடன் விராட் கோலி அதிகபட்சம் 30 முதல் 35 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதால், அவரால் நூறு சதங்களை அடிக்க முடியுமா என்று கேள்வி எழுகிறது.
இருப்பினும் தற்போதைய ஃபார்மில் விராட் கோலி தொடர்ந்து விளையாடினால் இது சாத்தியம் தான் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். அதோடு சதத்திற்கு சதம் காணும் வாய்ப்பை விராட் கோலிக்கு வழங்க பிசிசிஐ-யும் துணை நிற்க வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 54, டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 மற்றும் டி20-யில் 1 என மொத்தம் 85 சதங்களை விளாசியிருக்கிறார். சர்வதேச அளவில் அதிக சதங்களை விளாசிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
அதிக சதங்களை விளாசிய டாப் 5 வீரர்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் - 100
2. விராட் கோலி - 85
3. ரிக்கி பாண்டிங் - 71
4. குமார் சங்ககாரா - 63
5. ஜாக்கஸ் கல்லீஸ் - 61.
1. சர்வதேச அளவில் அனைத்து ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 782 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். இதில் டெஸ்ட் போட்டிகளில் 51, ஒருநாள் போட்டிகளில் 49 என மொத்தமாக 100 சதங்களை அடித்துள்ளார்.
2. 626 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 30, ஒருநாள் போட்டிகளில் 54, டி20-யில் 1 என மொத்தமாக 85 சதங்களை அடித்துள்ளார்.
3. 668 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் 41, ஒருநாள் போட்டிகளில் 30 என மொத்தமாக 71 சதங்களை அடித்துள்ளார்.
4. 666 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இலங்கையின் குமார் சங்ககாரா டெஸ்ட் போட்டிகளில் 38, ஒருநாள் போட்டிகளில் 25 என மொத்தமாக 63 சதங்களை அடித்துள்ளார்.
5. 617 இன்னிங்ஸில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்காவின் ஜாக்கஸ் கல்லீஸ் டெஸ்ட் போட்டிகளில் 45, ஒருநாள் போட்டிகளில் 17 என மொத்தமாக 62 சதங்களை அடித்துள்ளார்.