இந்திய அணியின் கேப்டனாக கில் வேண்டாம், இவரை நியமியுங்கள் என்று கூறியிருக்கிறார் அனில் கும்ப்ளே.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதாகிறது. இவர் டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் டி20 ஃபார்மெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோகித் ஷர்மாவிற்கு 37 வயது ஆவதால் அவரது ஓய்வு நேரமும் நெருங்கி வருகிறது.
இதனால் இவருக்கு அடுத்து இந்திய அணி கேப்டன் யார் என்பதுதான் அனைவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கில் தேர்ந்தெடுக்கப்படுவாரோ என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அதன் முதற்படியாகத்தான் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் பலரும் இது நியாயமே இல்லை என்று கூறி வந்தார்கள். ஏனெனில், சமீபக்காலமாக அவரது ஃபார்ம் சரியில்லாமல் இருந்து வந்தது.
ஆனால், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தற்போது டி20 போட்டிகளில் சதம் சதமாக அடித்து வருகிறார்.
இப்படியான நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ப்ளே ஒரு புதிய ஐடியா ஒன்றை தெரிவித்து இருக்கிறார். “கில் ஏற்கனவே இந்திய அணியில் தலைமை குழு பொறுப்பில் இருக்கின்றார். அவருக்கு நிச்சயம், ஒருநாள் கேப்டன் பதவி வந்து சேரும். ஆனால் ரோகித் சர்மா உடனடியாக கேப்டன் பதவி விட்டு சென்று விட்டால் பும்ரா தான் அந்தப் பதவிக்கு வர வேண்டும். ஏனென்றால் பும்ரா தான் ஆட்டோமேட்டிக் சாய்ஸாக இருப்பார். ஏற்கனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படும் நிலையில், ஒருநாள் போட்டிக்கும் அவரையே கேப்டனாக நியமிக்க வேண்டும்.
டி20 பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். ஆகையால், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு பும்ராதான் சரி. நாம் சரியாக பயன்படுத்தி முக்கிய தொடர்களில் மட்டும் விளையாட வைக்க வேண்டும். அவருக்கு பிறகு தான் கில் கேப்டன் பொறுப்புக்கு வரவேவேண்டும். 2027 உலககோப்பைக்கு இப்போதிலிருந்தே பும்ராவை தயார் செய்ய வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.