ஆஸ்திரேலியா இந்திய அணிகள் விளையாடவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் கட்டாயம் WTCக்கு செல்லும் என்றும் இந்திய அணியின் இலக்கு குறித்தும் பேசியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி ஆரம்பமானது. இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. குறிப்பாக விராட் கோலி மற்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா சில தனிபட்ட காரணங்களால் விளையாடவில்லை. மேலும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியானது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை குறித்தும், அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் என்ன பலன் என்பது குறித்தும் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
அதாவது, “இந்திய அணி அடிலய்டில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றால் நிச்சயம் WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதிப்போட்டிக்கு செல்வது முக்கியமல்ல அங்குச் சென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியா அணி பெர்த் மைதானத்தை அவர்களுடைய கோட்டையாக கருதுகிறார்கள். அவர்களை அங்கு வைத்தே வீழ்த்தியது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா நிச்சயம் 4-1 என பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லும்.” என்று ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
நியூசிலாந்து உடன் இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாஷ் அவுட் ஆனது. ஆகையால் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தால், WTC க்கு செல்வது கஷ்டமாகிவிடும். ஆகையால், பிசிசிஐ இந்திய அணிக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இறுதி வாய்ப்பை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா உடனான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.