சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.
50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையில் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், நாங்கள் இந்தியாவுக்கு போகவில்லையா? அதேபோல் இந்திய வீரர்களும் இங்கு வர வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வந்தது.
இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாம்பியன்ஸ் தொடரை எங்கு நடத்தலாம் என்று நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மீட்டிங்கில் இந்தியாவின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களில் நடத்த சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. அதாவது ஹைப்ரிட் மாடலுக்கு பிசிபி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்தமாட்டோம் என்று ஐசிசி எச்சரித்தது. ஒருவேளை இப்படி நடந்தால், அது பாகிஸ்தானுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதாலும் வேறு வழியில்லாமல் பிசிபி ஹைப்ரிட் முறைக்கு ஒப்புக்கொண்டது.
இதற்கு பிசிபி சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதாவது இனி ஐசிசி நடத்தும் போட்டிகள் இந்தியாவில் நடந்தால், பாகிஸ்தான் இங்கு வந்து விளையாடாது என்றும், இந்திய அணி லீக் சுற்றைத் தாண்டவில்லை என்றால், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளை பாகிஸ்தானிலேயே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.