கிரிக்கெட் உலகில் அதிக உலக்கோப்பைகளை வென்ற நாடு ஆஸ்திரேலியா. உலகக்கோப்பைத் தொடர் வந்துவிட்டால், மற்ற அணிகளை விடவும் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் எப்போதுமே வெறித்தனமாக இருக்கும். இதனால் தான் அதிக கோப்பைகளைத் தன்வசம் வைத்துள்ளது இந்த அணி. வரலாற்றில் அத்தகைய ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் நிலைகுலையச் செய்தது இரண்டு கேப்டன்கள் தான். அதில் ஒருவர் இந்தியக் கேப்டன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம், யார் அந்த இருவர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஆஸ்திரேலிய அணி கூட ஒருசில தொடர்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், ஒரு சில தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்களை பந்தை அடித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளி, நிலைகுலையச் செய்தவர்கள் இருவர் தான். 1932 -33 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் டான் பிராட்மேன். அசாத்திய திறமை கொண்ட இந்த அணியை, அப்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டன் டக்ளஸ் ஜார்டைன் 'பாடிலைன் அட்டாக்' மூலம் நிலைகுலையச் செய்தார்.
பாடிலைன் அட்டாக்கா? விசித்திரமாக இருக்கிறதே என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது அல்லவா? லெக் திசையில் ஃபீல்டர்களை அருகில் நிற்க வைத்தும், டீப் லைனில் ஃபீல்டரை நிற்க வைத்தும் ரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து பேட்ஸ்மேனின் உடலை நோக்கி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். இந்தப் பந்துகள் ஷார்ட் பிச்சில் எகிறும் பந்துகளாக உடலை நோக்கி வரும். இப்படி வீசும் போது பேட்ஸ்மேன்களால் பந்தை விடவே முடியாது. அடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு அவுட் ஆகி விடுவார்கள். இந்த வியூகத்தைப் பயன்படுத்தி டக்ளஸ் ஜார்டைன் ஆஸ்திரேலிய அணியை மிக எளிதில் வீழ்த்தி விட்டார்.
கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து இதே பாடிலைன் அட்டாக்கை கையில் எடுத்தது இந்திய அணி. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது. பிறகு விராட் கோலி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்ப, கேப்டன் பொறுப்பை ஏற்றார் அஜிங்கியா ரஹானே. அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆலோசனைப் படி பாடிலைன் அட்டாக் முறையில், லெக் திசை கள வியூகத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பயன்படுத்தினார். இதனால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது.
முதல் போட்டியில் தோல்வி பெற்ற நிலையிலும், சீனியர் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்ட போதும், இளம் வீரர்களை வைத்துக் கொண்டு தொடரை வென்றார் ரஹானே. இந்த வெற்றி வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது ஒரு சாதனை என்றால், அவர்களை நிலைகுலையச் செய்வதும் ஒரு சாதனை தான்.
கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணியை, அதன் சொந்த மண்ணில் நிலைகுலைய வைத்த சாதனையைச் செய்த இங்கிலாந்து கேப்டன் டக்ளஸ் ஜார்டைன் உடன் இந்திய அணியின் ரஹானேவும் இணைந்திருப்பது காலத்தால் என்றும் மறக்க முடியாது.