
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி , 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட , இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 2 இரண்டில் வென்று இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்த டி20 தொடரில் 4-வது போட்டி , புதன் கிழமை அன்று டிராபோர்ட்டில் நடைபெற்றது. வழக்கம் போல இந்த முறையும் இங்கிலாந்து அணி டாஸை வென்றது. கேப்டன் டாமி பியுமன்ட் இம்முறை பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் சார்பாக சோபியா டங்க்லியும், டேனி வயட் ஹாட்ஜ்ஜும் முதலில் களமிறங்கினர். இம்முறை கவனமாக விளையாட நினைத்த இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் டேனி வயட்டை 3-வது ஓவரில் ஶ்ரீ சரனி வெளியேற்றினார். 6-வது ஓவரில் சோபியாவையும் 22 ரன்களில் வெளியேற்ற இங்கிலாந்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.
இங்கிலாந்து அணியில் நேற்றைய போட்டியில் சோபியா(22) அடித்ததே அணியில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. கேப்டன் டாமி பியுமன்ட் மற்றும் காப்ஸ் சிறிது நேரம் இணைந்து ரன்களை சேகரித்தனர். இவர்களுக்கு பின் வந்த அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற தொடங்கினர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா அணி சார்பில் ராதா யாதவ் மற்றும் ஶ்ரீ சாரணி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.
127 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங்கை துவங்கியது. ஷாபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் ஆட்டத்தை அதிரடியாக துவக்கினர். இந்த கூட்டணி இணைந்து 56 ரன்கள் எடுத்து வலுவான நிலைக்கு அணியை கொண்டு சென்றது. ஷாபாலி 31 ரன்களிலும் ஸ்மிருதி 32 ரன்களிலும் வெளியேறினார்கள். ஜெமிமாவும் ஹர்மன், பிரித் கவுரும் சிறிது ரன்களை சேர்க்க இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 127 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் , ஏற்கனவே இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தில் டி20 தொடரை வென்று சாதித்துள்ளது. ஆட்ட நாயகியாக ராதா யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரின் முக்கியத்துவம் இல்லாத இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.