ஐசிசி சாம்பியன்ஷிப் ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி ஜன.12 , நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது . இந்த்தொடரின் முதல் போட்டியை வென்று இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதியுடன் பிரத்திகா ராவல் களமிறங்கினார்.
துவக்க ஜோடிகள் இருவரும் அயர்லாந்து அணியின் பந்து வீச்சுகளை நொறுக்கி தள்ளினர். முதல் ஓவரில் 10 ரன்களை குவித்து தங்களது அதிரடியை இடியாக துவக்கினர்.பிரத்திகாவின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது அதன் பிறகு ஸ்மிருதி அவரையும் தாண்டிய வேகத்தை காட்டினார். இந்த ஜோடிகள் 156 ரன்களை குவித்தனர். ஸ்மிருதி 10 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்த பந்திலேயே பிரத்திகாவும் (67) வெளியேற இந்திய அணி ஒரு நிமிடம் தள்ளாட தொடங்கியது.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் மற்றும் ஜெமிமா நங்கூரமிட்டு விளையாடினார்.2 வது விக்கட்டுக்கு இந்த ஜோடி சேர்ந்து 183 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தனர்.ஜெமிமா(102) ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தினை எட்டினார். ஹர்லின் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 370/5 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த ஸ்கோர் தான் இந்திய மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அயர்லாந்து அணியின் சார்பின் ஓர்லா மற்றும் அர்லீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கை அயர்லாந்து அணி விரட்ட தொடங்கியது. அணியின் கேப்டன் கேபி உடன் சாரா ஃபோர்ப்ஸ் களமிறங்கினர். மிக நிதானமாக ஆட்டத்தை துவங்கிய அயர்லாந்து அணியின் கேபி 19 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ்டினா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடினார். சாரா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் கிறிஸ்டினாவிற்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க வீராங்கனை இல்லை.
அடுத்தடுத்து களமிறங்கிய லாரா 37 ரன்கள் , லியா பால் 27 ரன்கள் என வெளியேற அயர்லாந்து அணியின் வெற்றி கை நழுவியது. 50 ஓவர்கள் முடிவில் 254/7 ரன்களை மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்தது. இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய ஆணியின் பந்து வீச்சாளர் தீப்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஜெமிமா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .3 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது.இந்த வருடத்தின் முதல் ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 15 அன்று நடைபெறும்.