
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்தாண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்த அவர், 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அஸ்வின் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஷ் லீக் தொடரில் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஷ் லீக் (பி.பி.எல்), ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரபலமான 20 ஓவர் லீக் போட்டியாகும். 15-வது பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 14-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் அணி, இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இந்த சீசனில் கடைசி கட்ட போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய இந்தியர் ஒருவர் பி.பி.எல்.-ல் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் இந்திய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர்கள் நிகில் சவுத்ரி, உன்முக் சந்த் இந்த போட்டியில் ஆடியுள்ளனர்.
டேவிட் வார்னரின் கேப்டன்ஷிப்பில் ஆட உள்ள தமிழகத்தை சேர்ந்த 39 வயதான அஸ்வின் கூறுகையில், ‘தலைமைத்துவத்துடனான எனது உரையாடல் அருமையாக இருந்தது. என்னை எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை தெளிவாக கூறினர். வார்னர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அணித் தலைவர் உங்களது மனநிலையை பகிர்ந்து கொள்ளும் போது அது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். சிட்னி தண்டர் அணிக்காக களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
அஸ்வின், பிக்பாஷ் லீக் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.