
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் CSK அணி தனது X தளத்தில் போட்ட ட்வீட் இணையத்தில் வைராகி வருகிறது.
கிரிக்கெட் உலகையே உலுக்கிய வெற்றிகள் மற்றும் சர்ச்சைகளால் நிறைந்த 16 ஆண்டுகால அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து(ஐபிஎல்) ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். 38 வயதான அஸ்வின் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்குகளில் பங்கேற்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் SA20 மற்றும் ILT20க்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்தாண்டு (2024-ல்)டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிவதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் மூலம் அஸ்வின், தனது தொழில்முறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடைசியாக 2025 டி20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடினார் அஸ்வின். 7.2 என்ற எகானமி ரேட்டில் 187 ஸ்ட்ரைக்குகளுடன் ஐந்தாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்துள்ளார். சிஎஸ்கேவில் தொடங்கிய அஸ்வினின் பயணம் சிஎஸ்கேவில் முடிந்துள்ளது.
அஸ்வின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,‘ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்றும், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் வெவ்வேறு தொடர்களில் (லீக்)ஆராயும் எனது நேரம் இன்று தொடங்குகிறது என்று தனது முடிவை சூசகமாக பதிவிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக அனைத்து வீரர்களுடனான அற்புதமான நினைவுகள் மற்றும் அனைத்து அணிகளுடனான உறவுகளுக்காகவும், மிக முக்கியமாக IPL மற்றும் BCCI இதுவரை எனக்கு வாய்ப்பு வழங்கிய அனைத்து உரிமையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புவாகவும் அவர் தெரிவித்துள்ளார்’.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) கொள்கையின்படி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இந்திய பிரீமியர் லீக்கிலிருந்து விலகாவிட்டால், எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்குகளில் பங்கேற்க முடியாது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், அஸ்வின் ஐபிஎல்லில் விளையாடும் வரை, வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்பது சாத்தியமில்லை.
எனவே, பிக் பாஷ் லீக் (பிபிஎல்), எஸ்ஏ20 அல்லது பிற உரிமையாளர் போட்டிகள் போன்ற வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க, அஸ்வின் ஐபிஎல்லிலிருந்தும் விலக வேண்டியிருந்தது. ஐபிஎல்லை விட்டு வெளியேறும் அஸ்வின் முடிவு, உலகின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்திலிருந்து தோன்றியதாகத் தெரிகிறது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்த நிலையில், CSK அணி தனது X தளத்தில், “வாழ்க்கை ஒரு வட்டம். ஐபிஎல் பயணத்தை அஸ்வின் CSKவில் தொடங்கி, CSK அணியுடன் முடித்துள்ளார். சிங்கம் எப்போதுமே சிங்கம் தான். சிஎஸ்கேவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி சேப்பாக்கத்தை கோட்டையாக மாற்றியவர் அஸ்வின். மஞ்சள் நிற ஜெர்சியில் நீங்கள் செய்த படைப்புகள் என்றும் நினைவில் இருக்கும். நன்றி” என குறிப்பிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், இதுவரை 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 லீக்கில் 187 விக்கெட்டுகள், 30.22 சராசரி, 7.20 எகானமி ரேட் மற்றும் 25.2 ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றுடன் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தனது அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொண்டார். ஐபிஎல் தொடரில் இடது கை பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அஸ்வின் ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.