கிரிக்கெட்டிற்கு ஆபத்தா? "இது கிரிக்கெட்டே அல்ல" ஆதங்கப்படும் தென்னாப்பிரிக்க பௌலர்!

Kagiso Rabada
Cricket - Batting
Published on

நவீன கால கிரிக்கெட் யுகம் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக உள்ளது என கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது உண்மை தான் என்பதற்கு ஏற்பவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் பேட்டிங்கிற்கு சாகதகமாகவே உள்ளது. திறமையான பௌலர்கள் பந்து வீசினாலும் கூட சிக்ஸர், பவுண்டரியைத் தடுக்க முடியவில்லை. ஆகையால் இந்த விளையாட்டை கிரிக்கெட் என அழைப்பதே தவறு என தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஆதங்கப்படுகிறார்.

இன்றைய காலத்தில் கிரிக்கெட் எவ்வளவோ மாறி விட்டது. அன்று பேட்ஸ்மேன்களுக்கும், பௌலர்களுக்கும் இடையில் ஒரு நடுநிலைத் தன்மை இருந்தது. ஒருமுறை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினால், மறுமுறை பௌலர்களின் ஆதிக்கம் மேலோங்கும். ஆனால் இன்றோ பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பௌலர்களால் எழவே முடியவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதே இதற்கு சான்றாகும்.

பல முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் தற்போதைய கிரிக்கெட்டின் போக்கு குறித்து ஏற்கனவே கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா கிரிக்கெட்டின் பெயரை ‘பேட்டிங்’ என மாற்றி விடுங்கள் என ஆதங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாளுக்கு நாள் கிரிக்கெட் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஆனால் இந்த முன்னேற்றம் ஒருதலைப்பட்சமாக இருப்பது தான் வேதனை அளிக்கிறது‌. அதிக ரன்கள் குவிக்கப்படும் ஆட்டங்கள் எப்படி முக்கியமோ, அதேபோல் குறைந்த ரன்கள் கொண்ட ஆட்டங்களும் முக்கியம். ஆனால், இன்றைய கிரிக்கெட்டின் நிலைமை அப்படி இல்லை.

பவுண்டரி எல்லைகள் குறுகி விட்டன; விதிகளும் மாறி விட்டன. இப்படி இருந்தால் பேட்ஸ்மேன்கள் கண்டமேனிக்கு பந்தை அடிக்கத் தான் செய்வார்கள். பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் தான் அது கிரிக்கெட். அப்படி இல்லையெனில் இந்த விளையாட்டை கிரிக்கெட் என சொல்லி என்ன பயன்? கிரிக்கெட் விளையாட்டை ‘பேட்டிங்’ என்று அழைப்பது தான் சரி. விக்கெட்டுகள் விழுந்தால் தான் பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட வேண்டும் என சிந்திப்பார்கள். பௌலர்களுக்கும் உத்வேகத்தைத் தரும்” என ரபாடா கூறினார்.

பௌலர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் தான் போட்டி இருக்க வேண்டும். ஆனால், இங்கு போட்டியே இல்லை. இருதரப்பிலும் பேட்ஸ்மேன்களின் கையே ஓங்கி நிற்கிறது. இது எதார்த்தமான கிரிக்கெட் அல்ல என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்.

சிக்ஸ் அடிப்பதை மட்டும் ரசித்தால் போதுமா? விக்கெட்டுகள் விழுவதையும், பௌலர்கள் வீசும் நல்ல பந்துகளையும் ரசிக்க வேண்டும். இப்படியே போனால் எவ்வளவு ரன் அடித்தாலும் போதாது என்று மனநிலை வந்து விடும். இது கிரிக்கெட்டிற்கே கூட ஆபத்தாக முடியலாம்.

ஏற்கனவே இந்தியவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் பௌலர்களை காப்பாற்றுங்கள் குரல் கொடுத்தனர். தற்போது தென்னாப்பிரிக்க வீரரும் குரல் கொடுத்துள்ளார். இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடர்ந்தால், அதன்பிறகு பௌலர்களின் எண்ணிக்கை குறைவாகவும், பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகமாகவும் தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் இவர் தான்: கபில்தேவ் சொல்வது யாரைத் தெரியுமா?
Kagiso Rabada

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com