
இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வீரர்கள் தனித்தன்மையுடன் ஜொலித்தனர். கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், எம்.எஸ். தோனி, யுவராஜ் சிங், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு வீரரின் செயல்பாடு மிகவும் பிடிக்கும். அவ்வகையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தனக்குப் பிடித்த மிகச்சிறந்த வீரரை அடையாளம் காட்டியுள்ளார். யார் அந்த வீரர்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணியில் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் இருந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றும் வல்லமைப் பெற்ற வீரர்கள் வெகு சிலரே. அதில் முக்கியமானவர் கபில்தேவ். இதற்கு சான்றாக 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை உதாரணமாகக் கூறலாம். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, களத்திற்கு வந்த கபில்தேவ் அணியை சரிவில் இருந்து மீட்டது மட்டுமின்றி, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 175 ரன்களைக் குவித்து உலக சாதனையையும் படைத்தார்.
இவரது இந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நிகழ்வாகும். இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில்தேவின் தலைமையில் தான் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பையையும் வென்றது.
இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த வீரரான முன்னாள் கேப்டன் கபில்தேவ், நவீன கால கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி என சமீபத்தில் புகழாரம் சூட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் இதுவரை பார்த்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகளவில் தலைசிறந்த வீரர்களைப் பட்டியலிட்டால், அதில் விராட் கோலி நிச்சயமாக இடம் பிடிப்பார். கிரிக்கெட் அரங்கில் இவர் செய்திருக்கும் சாதனைகள் அசாத்தியமானவை.
பல நேரங்களில் இந்திய அணிக்கு பெரும்பங்காற்றிய வீரர் இவர். ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை விளாசியிருக்கும் கோலி, இன்னமும் பல சாதனைகளைச் செய்வதுடன், இந்திய அணி அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வெல்ல துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நம்புகிறேன்” என கபில்தேவ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடிய கிங் கோலி, நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் கோலி, சமீபத்தில் ரன் குவிக்கத் திணறுகிறார். இருப்பினும், விரைவிலேயே இவர் பழைய நிலைமைக்குத் திரும்பி, ரன் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.