வெளியே இருக்கும் சலசலப்புக்கு பயப்பட மாட்டேன்! சுனில் கவாஸ்கர், அஸ்வினுக்கு கம்பீரின் அதிரடி பதிலடி!

Vaibhav and Gambhir
Vaibhav and Gambhir Facebook
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

மீண்டும் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு மறுக்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி , அதற்கு பதிலளித்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் 15 வயதே நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷி. இந்தியா முழுக்க அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதைத் தாண்டி இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் ஆதரவும், சர்வதேச நாடுகளின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான வைபவ் , ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் வென்று சாதித்தார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவரை அடுத்து வந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், தேர்வு செய்யாமல் தேர்வு குழு அவரை புறக்கணித்தது. அதன் பின்னர் ஜப்பான் உடன் நடைபெற்ற போட்டிகளிலும் அவரைத் தேர்வு செய்யவில்லை. இது போன்ற செயல்பாடுகளினால் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் , தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஸ்ரீகாந்த் மற்றும் அஸ்வின் ஆகியோர் வைபவை தொடர்ச்சியாக தேர்வு செய்யாத, தேர்வுக் குழுவின் பாரபட்சத்தினை விமர்சித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது பொதுவான இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய தேர்வு குழுவினை கடுமையாக சாடி வருகின்றனர்.

தேர்வுக் குழுவின் செயல்பாடுகளினால் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர், இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். " இது எனக்கும் புதிய அனுபவம் , வைபவ் நல்ல ஃபார்மில் இருந்தார். அதே நேரம் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் அணியில் இருப்பதால், அவருக்கான வாய்ப்புகளுக்கு காத்திருக்க வேண்டும் என்பதை நான் புரிய வைத்தேன்.

சமூக ஊடகங்களோ, வெளி உலகத்தின் விமர்சனங்களோ ஆடும் லெவனை தேர்வு செய்யாது. பயிற்சியாளர் ,கேப்டன், உடைமாற்றும் அறையில் இருப்பவர்கள் தான் ஆடும் லெவனை தீர்மானிக்க முடியும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், வைபவிற்கு வாய்ப்பு அளித்திருந்தால், ஏற்கனவே அணியில் உள்ள அபிஷேக் ஷர்மா அல்லது சஞ்சு சாமசனை நீக்குவதை நியாயப்படுத்த என்னால் முடியாது.

Gambhir
Gambhirx

அவருக்காக நான் யாரை நீக்குகிறேனோ? அவர்களுக்கும் எனக்கும் இடையில் கடினமான உரையாடல் நடந்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெரிய தாக்கத்தை கொடுத்த ஒரு கூட்டணியை திடீரென்று எங்களால் புறக்கணிக்க முடியாது. ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு அவர்களை நீக்கிவிட்டு, நல்ல பார்மில் இருக்கும் திறமையான இளம் வீரரை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியாது," என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "சில நேரங்களில் உங்களின் வாய்ப்புகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் உடைமாற்றும் அறையில் நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். இது பற்றி தான் ஏற்கனவே வைபவுடன் உரையாடி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கௌதம் கம்பீர், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் கூறப்படும் அறிவுரைகள் எதையும் தான் ஏற்பதில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

கம்ப்பீரின் இந்த பேட்டி , மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் விளையாடுவாரா? என்பதை கேள்வி குறியாக்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com