ப்ளேயிங் லெவனில் இந்த தமிழக வீரரை சேர்க்க கம்பீர் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாக ரவிச்சந்திர அஸ்வின் பேசியிருக்கிறார்.
சமீபக்காலமாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரை அதிகம் பார்க்க முடிகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என்ற மூன்று ஃபார்மெட்டிலும் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் ஒரு சுழற் பந்துவீச்சாளரான இவர், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். இப்படி ஒரு பந்துவீச்சாளர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்குவது சிறந்த ஒன்றாகும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குவது அணிக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
ஆனால், கிரிக்கெட் போன்ற துறைகளில் அரசியல் அதிகம் இருக்கும் என்பதால், எத்தனை திறமை இருந்தாலும், அணியில் இடம்பெறுவது அசாத்தியமான ஒன்று. ஆனால், வாஷிங்டன் சுந்தர் திறமையை மதித்து இந்திய அணியில் சேர்க்கிறார்கள்.
ஆனால், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வட்டாரத்தினருக்கும், வாஷிங்கடன் சுந்தருக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்று சந்தேகம் இருந்தது.
இதுகுறித்து அஸ்வின் பேசியிருக்கிறார். "பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதால் அவரை ஒரு ஆல் ரவுண்டராக அணியில் தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறார். போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப வாஷிங்டன் சுந்தரை பேட்டிங்கில் பின் வரிசையிலோ அல்லது மிடில் ஆர்டரிலோ பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பதுதான் அதற்கு காரணம்.
ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவும் அக்சர் பட்டேலும் ஐந்தாவது வரிசையிலும், ஹர்திக் பாண்டியா ஏழாவது வரிசையிலும், வாஷிங்டன் சுந்தர் எட்டாவது வரிசையிலும் பேட்டிங் செய்வார்கள். இதனால், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் அல்லது குல்தீப் யாதவுடன் மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்ய முடியும்.” என்று பேசியிருக்கிறார்.
வாஷிங்கடன் சுந்தர் அணியில் இருப்பது எப்படிப் பார்த்தாலும், இந்திய அணிக்கு இரட்டிப்பு நன்மை. அதுவும் சுந்தர் போல் ஒரு தமிழக வீரர் அனைத்திலும் பெஸ்ட்டாக இருந்தால்தான், கவனம் பெறமுடியும். ஏனெனில், தமிழக வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவது அரிது.