
ஒரு சாமானியனின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைக் காவல்துறையும் நீதித்துறையும் எப்படிக் கையாள்கிறது; மேலோட்டமாக விசாரிக்கப்படும் நிகழ்வுகள் எப்படிப் பல குடும்பங்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கிறது; அப்படி நீதி மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதை தான் ஆனந்த் ஸ்ரீபாலா.
விடுதியை விட்டுக் கிளம்பிய தன் மகளைக் காணவில்லை என்று அப்பெண்ணின் பெற்றோரும் விடுதியின் பொறுப்பாளரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகின்றனர். அவர்கள் பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டு ஒரு வழியாகப் புகார் கொடுக்கின்றனர். விசாரணையின்போது, அப்பெண், கொச்சியில் உள்ள ஒரு பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவளுடைய காதலனுடன் நடந்த சண்டையில் அவர் இந்த முடிவெடுத்தார் என்று இந்த வழக்கு முடிக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ளாத அப்பெண்ணின் பெற்றோர் நீதி கேட்டுப் போராடுகிறார்கள்.
தனது அம்மா ஸ்ரீபாலா நினைவாக அவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொண்டு போலீசாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞன் ஆனந்த் ஸ்ரீபாலா. தனது காதலியான ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஸ்ரீபாலாவுடன் (அபர்ணா தாஸ்) சேர்ந்து அவரது தொலைக்காட்சியில் உதவி செய்கிறார். நகரத்தில் நடக்கும் குற்றங்களைப் பற்றி ஆராய்ந்து செய்தி சேகரித்து வெளியிடுவது அவரது பணி. அப்படியிருக்க ஆனந்த் ஸ்ரீபாலாவின் கவனத்திற்கு இந்தத் தற்கொலை சம்பந்தப்பட்ட வழக்கு வருகிறது. அவருக்கு இது தற்கொலை அல்ல. ஒரு கொலை என்று தோன்றுகிறது. தனது வழிகாட்டியான சித்திக் மற்றும் காதலியின் உதவியுடன் இதைத் தொடர்ந்து விசாரிக்கிறார்.
இறந்த பெண்ணின் பெற்றோர்க்கு எதிரான போராட்டம் வலுக்கவே இதைத் திரும்ப எடுத்து விசாரணை செய்ய ஒரு தனிக்குழு அமைக்கிறார் டிஜிபி ஷிவதா. அந்தக் குழுவின் தலைவராகச் சைஜு குரூப் வருகிறார். இந்த இரண்டு குழுக்களின் விசாரணை எப்படி செல்கிறது. உண்மையில் நடந்தது என்ன. அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கு நீதி கிடைத்ததா என்பதைச் சொல்வது தான் ஆனந்த் ஸ்ரீபாலா.
மலையாளப்படவுலகினரின் இந்தக் கிரைம் கதைகள் மீதான அதீத ஈடுபாடு இந்தப் படத்திலும் வெளிப்பட்டுள்ளது. ஒரு சாதாரண கதையை அமைதியான அதே சமயம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு துப்பறியும் கதையாக மாற்றி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்த மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழ அவிழ வழக்கு முற்றிலும் வேறு திசையை நோக்கிப் பயணிக்கிறது. விசாரிக்கும் பாணி வேறு வேறாக இருந்தாலும் நோக்கம், பார்க்கும் கோணம் இரண்டும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் குழுக்கள் சந்திக்கும் இடம் மொத்தப் படத்தையும் மாற்றி அமைக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்று போலீஸ் கண்டுபிடித்ததும் படம் முடிவதில்லை. இன்னொரு கோணம் அங்கு வருகிறது. கடைசியில் அட பரவாயில்லடா என்று சொல்ல வைக்கும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிகிறது. இந்த இரண்டு குழுக்களுக்கிடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் சுவாரசியம்.
ஆனந்த் ஸ்ரீபாலாவாக அர்ஜுன் அசோகன். தனது அம்மா (பூவே உனக்காக சங்கீதா) எப்பொழுதும் தன்னுடன் இருந்து தன்னை வழிநடத்துவதாக உணர்கிறார். சங்கீதாவும் தனது அமைதியான அதே சமயம் அழுத்தமான நடிப்பால் அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். அழகான அதே சமயம் இளமையான ஒரு அம்மா. கூடிய சீக்கிரம் கோலிவுட்டுக்கு வருகை தரலாம். இவர்கள் இருவரும் வரும் காட்சிகளில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சேர்ந்து அழகாக்குகின்றன. படத்தின் இறுதிக்காட்சி நல்ல உதாரணம். சித்திக், சைஜுகுரூப், இருவரும் கச்சிதம்.
ஒரு முக்கியக் குற்றவாளியைத் துரத்தும் கட்சியில் ட்ரோன் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ள விதம் சபாஷ். சண்டைக்காட்சிகள் எல்லை மீறாமல் இயல்பாக இருப்பது ஆசுவாசமாக இருக்கிறது. குற்றத்தின் முடிச்சுகள் அவிழும் விதமும் சற்று சுற்றி வளைத்துச் சொல்லப்படுவதும் மலையாள படங்களுக்கே உரித்தான மெதுவான திரைக்கதையோட்டமும் படத்தை நீளமாக உணரச் செய்கின்றன.
கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ள கதை. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு வினய் இயக்கியிருக்கிறார். ரஞ்சின் ராஜின் பின்னணி இசை படத்திற்கு தேவையான அளவு இருந்தாலும் தேவை இல்லாமல் வரும் ஒரு டூயட் பாடலும், சோகப்பாடலும் இது போன்ற படங்களுக்குத் தேவையே இல்லை என்று தான் தோன்றுகிறது. இந்தியப்படங்கள் பெரும்பாலானவை குறைந்த பாடல்கள் அல்லது பாடல்கள் அல்லாத படங்கள் என்ற போக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எதிலும் ஒரு ட்ரெண்ட்டை உருவாக்கும் மலையாளப்படங்கள் இன்னும் இந்தப் பாடல்களைக் கட்டிக் கொண்டு அழுவது ஆச்சரியம் தான்.
ஒரு நல்ல கிரைம் கதை, சண்டை வேண்டாம், வன்முறை வேண்டாம், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்போது நேரம் நல்லபடியாகக் கழிந்தால் போதும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் தான் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஆனந்த் ஸ்ரீபாலா