Gautam Gambhir with Dinesh karthik
Gautam Gambhir with Dinesh karthik

கவுதம் கம்பீருக்கு இதில் அனுபவம் கிடையாது – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

Published on

தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு அனுபவம் கிடையாது என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

இந்திய அணி மற்றும் வங்கதேசத்து அணி இடையே நாளை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் பயிற்சியாளராக இது முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இவர் எப்படி அணியை வழிநடத்துவார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.

கவுதம் கம்பீருக்கு டெஸ்ட் தொடரில் அவ்வளவு அனுபவம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடி பல விமர்சனங்களை சந்தித்தார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவுதம் கம்பீர், 9 சதங்கள், 22 அரைசதங்கள் உட்பட 4,154 ரன்களை விளாசி இருக்கிறார்.

பயிற்சியாளராக இதுவரை டி20 போட்டிகளில் மட்டுமே செயல்பட்டிருப்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறை.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார், “கவுதம் கம்பீர் ஆக்ரோஷமான மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அது பெரும்பாலும் சொந்த அணி வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே வெளிப்படும். இதனால் இளம் வீரர்கள் கம்பீரின் பயிற்சியின் கீழ் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அதேபோல் கவுதம் அனைவரிடமும் கோபப்படமாட்டார். எந்த வீரரிடம் கோபப்பட வேண்டுமோ அவரிடம் மட்டும்தான் கோபப்படுவார். அதுவும் அந்த வீரரின் திறமையை வெளிக்கொண்டுவரத்தான் இருக்கும். அதேபோல், ஏராளமான டி20 தொடர்களில் கம்பீர் விளையாடியிருக்கிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பயிற்சியாளர் என்றால், அது புதுமையாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது இந்தியா!
Gautam Gambhir with Dinesh karthik

நிச்சயம் கம்பீர் மூளைக்குள் இந்த விஷயம் ஓடிக்கொண்டே இருக்கும். அதேபோல் நெருப்பாற்றில் நீந்தி பழகியவர் கம்பீர். அதனால் டெஸ்ட் போட்டிகளிலும் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக செயல்படும் திறன் கம்பீரிடம் நிறையவே உள்ளது. பயிற்சியாளராக தொடக்க நிலையில் தான் கம்பீர் இருக்கிறார். அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை அவர் சிறப்பாக செயல்பட்டே வந்துள்ளார்.” என்று கவுதம் குறித்து பேசினார்.

மேலும் நாளைய டெஸ்ட் போட்டி குறித்துப் பேசுகையில், “இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் இந்திய அணிக்கும் புதிய வங்கதேசம் அணியை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.” என்றார்.


logo
Kalki Online
kalkionline.com