
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ரோஹித், கோலி மற்றும் அஸ்வின் ஆகிய 3 சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றதால், இளம் இந்தியப் படை இங்கிலாந்தை எதிர்கொள்ள காத்திருக்கிறது. ‘இளம் கன்று பயமறியாது’ என்பது போல இந்திய வீரர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதோடு இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்தவர்களுக்கும் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் வீரேந்திர ஷேவாக்கிற்கு அடுத்து முச்சதம் கண்ட வீரர் கருண் நாயர். இவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2016 இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்து சாதனைப் படைத்தார். ஆனால் அதற்குப் பின் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் முச்சத நாயகன் கருண் நாயர்.
உள்ளூர் போட்டிகளில் ரன் மெஷினாக செயல்பட்டு சதங்களை விளாசியதன் மூலம், பிசிசிஐ மீண்டும் இவரை உற்று நோக்கியது. 30 வயதைக் கடந்தாலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையில் ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் அதிக ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் பலனாக இன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இணைந்துள்ளார் கருண் நாயர்.
“நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சாதாரண ஒன்றல்ல. உள்ளூர் போட்டிகளில் ரன் குவிப்பதைக் காட்டிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னேறும் மனப்பான்மை தான் அவசியம். இது தான் கருண் நாயரை மீண்டும் இந்திய அணிக்குள் இணைத்துள்ளது. அவரது வருகை அனைத்து வீரர்களுக்குமே உத்வேகம் அளிக்கும்.
உள்ளூர் தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்திருக்கிறார் தமிழக வீரர் சாய் சுதர்ஷன். அனைத்து வீரர்களுக்குமே முதல் போட்டி என்றால் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். சாய் சுதர்ஷன் இந்தத் தொடரை ஸ்பெஷலாக மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அதேபோல் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங், டெஸ்ட் போட்டியிலும் விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். இளம் இந்திய வீரர்கள் துணிவுடன் செயல்பட்டால், நிச்சயமாக இந்தத் தொடரை வாழ்வில் மறக்க முடியாத தொடராக மாற்றலாம்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி விட்டது. இந்நிலையில், சுப்பன் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருவார் என சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கவுதம் கம்பீரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அணி, சுப்பன் கில் தலைமையில் சாதனைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.