இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு பல அதிரடியான முடிவுகளை எடுப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் எண்ணத்தில் கவுதம் கம்பீர் செயல்படுவாரா மற்றும் தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிப்பாரா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரை வென்ற இளம் இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதைப் பெற்று அசத்தினார். ரவீந்திர ஜடேஜாவின் ஓய்வுக்குப் பிறகு, அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர் சுந்தர் தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் கலக்கும் சுந்தருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், அடுத்து வரும் இலங்கைத் தொடரில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துவீசி வரும் வருண் சக்கரவர்த்தி, ஜிம்பாப்வே தொடருக்கான தேர்வில் இடம்பெறவில்லை. இருப்பினும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த கம்பீர், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருப்பதால் இவருக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசி அசத்திய டி நடராஜனுக்கு தொடர்ந்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இவர் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். ஆஸ்திரேலியா வீரர்கள் கூட நடராஜன் இல்லாத இந்திய அணியை ஆச்சரியமாக பார்த்தனர். அந்த அளவிற்கு திறமைகள் இருந்தும் தேர்வுக்குழு நடராஜனைத் தேர்ந்தெடுக்கவில்லை. யார்க்கர் வீசுவதில் வல்லவரான இவர், தற்போது ஸ்லோயர் பந்துகளை வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார். பும்ராவுடன் இணைந்து நடராஜன் இந்திய அணியில் பந்துவீசினால், இந்தியாவின் பந்துவீச்சு இன்னும் பலமாக இருக்கும்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் தமிழக வீரர்களில் ஒருவர் கூட தேர்வாகாத நிலையில், மற்ற மாநில வீரர்களை விட தமிழக வீரர்கள் 2 மடங்கு உழைத்தால் தான் வாய்ப்பு கிடைக்குமா என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதற்கேற்ப தேர்வுக்குழுவும் எப்போதாவது ஒரு வாய்ப்பை மட்டும் தமிழக வீரர்களுக்கு அளித்து விட்டு, அதன் பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
தமிழக வீரர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தேர்வுக்குழுவை தமிழகத்தின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய பயிற்சியாளர் கம்பீர் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு தருவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இளம் வீரர்களை ஆதரிக்கும் கம்பீர், இந்திய அணியின் வெற்றிக்காக எந்தவொரு கடினமான முடிவையும் எடுப்பார் எனத் தெரிகிறது. இளம் வீரர்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய கம்பீர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.