கவுதம் கம்பீரின் அன்றைய கனவு... பிறகு நடந்தது என்ன?

Gautam Gambhir
Gautam Gambhir

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றியவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று தர வேண்டும் என இவருக்கு எப்போது தோன்றியது என்பது குறித்து அவரே தற்போது கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்த போதிலும் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடந்து முடிந்த டி20 உலக்கோப்பையை கைப்பற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதனைப் படைத்தது. இந்தத் தொடரோடு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துகளை வெளியிட்டு வரும் கம்பீர், உலகக்கோப்பையை இந்திய அணிக்காக வெல்ல வேண்டும் என்ற வேட்கை எப்போது பிறந்தது என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

"1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை பிரிஸ்பேனில் எதிர்கொண்டது. இப்போட்டியில் வெறும் 1 ரன்னில் தோல்வியை சந்தித்தது இந்தியா. அன்றைய தினம் இரவு முழுவதும் நான் மிகவும் அழுதேன். அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி அந்த அளவிற்கு நான் அழுததே இல்லை. அப்போது எனக்கு 11 வயது தான். இருப்பினும், இந்திய அணியின் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அப்போட்டிக்குப் பிறகும் நான் மகிழ்ச்சியற்றவனாகவே இருந்தேன்.

அப்போட்டி இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போதே முடிவு செய்தேன்; இந்தியாவுக்காக நிச்சயம் என்றாவது ஒருநாள் உலகக்கோப்பையை வென்று தர வேண்டும் என்று. என்னுடைய அந்தக் கனவை நோக்கித் தான் எனது கிரிக்கெட் பயணமும் தொடர்ந்தது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதும் நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை" என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
“எனக்கு அவர் குணம் பிடிக்கும்” - கவுதம் கம்பீரைப் பாராட்டிய அஸ்வின்!
Gautam Gambhir

2011 ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சேவாக் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும், பொறுப்புடன் விளையாடி 97 ரன்களை கவுதம் கம்பீர் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் கேப்டன் தோனியுடன் இணைந்து இவர் விளையாடிய இன்னிங்ஸ் இன்றும் போற்றும் படியாக இருக்கிறது.

ஒருவேளை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு கவுதம் கம்பீருக்கு வழங்கப்பட்டால், அடுத்து வரும் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு இன்னமும் மேலோங்கி காணப்படும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கம்பீர் ஒரு வீரராக உலக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பங்காற்றினார். இனி வருங்காலத்தில் பயிற்சியாளராகவும் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று தர ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் ; அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்ப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com