இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பதவிக்கு வருவது முன்னரே துணை பயிற்சியாளர்களை நான்தான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியதாக சொல்லப்பட்டது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடிற்கு கடைசி தொடராகும். அதன்பிறகு பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இதிலிருந்து கவுதம் கம்பீரே பயிற்சியாளராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் முதல் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணித் தேர்வில் இருந்தே தனது பணியை துவக்கி விடுவார்.
பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், துணை பயிற்சியாளர்களை தான்தான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தற்போது யார்யாரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று பார்ப்போம்.
மூன்று துணைப் பயிற்சியாளர்களில் மிகவும் முக்கியமானவர் அபிஷேக் நாயர். இவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் ஆடி உள்ளார். பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருந்தார். அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிங்கு சிங் போன்ற திறமையான வீரர்களை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் பந்து வீச்சாளராக இருந்த வினய்குமாரை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பல்வேறு டி20 தொடர்களில் ஃபிரான்சைஸ் அணிகளின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அடுத்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ்-ஐ நியமிக்க கவுதம் கம்பீர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்த போது ஜான்டி ரோட்ஸ்-ஐ அவர் பீல்டிங் பயிற்சியாளராக கொண்டு வந்தார்.
இந்த மூன்று வீரர்களிடம் கவுதம் கம்பீர் தனிப்பட்ட முறையில் பேசிவிட்டதாகவும், அவர்களும் துணை பயிற்சியாளராக வர ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.