உலக செஸ் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக, இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். நார்வேயில் நடைபெற்று வரும் நார்வே செஸ் 2025 போட்டியின் ஆறாவது சுற்றில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
உலகின் தற்போதைய உலக சாம்பியனான குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி, 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி, குகேஷின் செஸ் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், மேக்னஸ் கார்ல்சன் தோல்வியை உணர்ந்து ஆக்ரோஷமாக தனது வலது கையால் செஸ் போர்டு இருந்த மேசையை ஓங்கி குத்தினார். பின்னர், உடனடியாக குகேஷிடம் மன்னிப்பு கேட்டார். உடனே குகேஷ் ஆனந்த கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கார்ல்சனின் இந்த செயல், குகேஷ் பெற்ற வெற்றியின் மகத்துவத்தையும், உலகின் முன்னணி வீரரின் மனநிலையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம், குகேஷ் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இருப்பினும், கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். தற்போது உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தியதன் மூலம், அவரது திறமை மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இந்த வெற்றி, இந்திய செஸ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.