இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்கள் கட்டாயமாக திருமணத்திற்கு முன்பு யார் பெயரில் எடுத்திருந்தாலும், அதை திருமணத்திற்கு பின்பு நாமினியின் பெயரை தன் மனைவிக்கு/கணவனுக்கு மாற்றுவது நல்லது. இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் காண்போம்.
பாலிசி எடுத்திருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பாலிசியில் நாமினியாக நியமிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்பது நாம் அறிந்த விஷயம். அதில் நாமினியாக குடும்ப உறுப்பினர் பெற்றோர், உறவினர், நண்பர் என யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்தான். ஆனால் நியமிக்கப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மிகவும் நம்பிக்கை நாணயம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். தான் இல்லாவிட்டாலும் தன் குடும்பத்தின் மேல் அக்கறை பாசம் நிரம்பியவர்களாக பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவராக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவரை காப்பீடு எடுப்பவர் கவனமாக பார்த்து நியமிப்பது அவசியம். அப்படிப்பட்டவர்கள் இழப்பீட்டு பணத்தை பெற்று சட்டப்படியான வாரிசுகளுக்கு கொடுக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் பொறுப்பான குடும்ப உறுப்பினர்களின் ஒருவரை நாமினியாக நியமிப்பது சரியாக இருக்கும் .
நடைமுறையில்
திருமணத்திற்கு முன்பு ஒருவர் பாலிசி எடுக்கும் போது அம்மா பெயரை நாமினியாக நியமித்திருந்தால், திருமணத்திற்குப் பிறகு நாமினியாக கணவர், மனைவியின் பெயரை மாற்றி விடுவது நல்லது. அப்படி மாற்றாதபட்சத்தில் பாலிசிதாரரை சார்ந்திருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு (கணவருக்கு ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால்) அது சரியாகப் போய் சேராது.
அதுபோல்தான் என் உறவினர் ஒருவர் தன் அம்மாவை நாமினியாக நியமித்து வைத்திருந்தார். மேலும் அம்மாவின் மீது உள்ள அன்பினால் தான் சம்பாதித்த சொத்து மனை, அனைத்தையுமே அம்மா பெயரில் தான் எழுதி வைத்திருந்தார். திடீரென்று உறவினர் இறந்து விட, அவரின் அம்மா மருமகளுக்கும் பிள்ளைகளுக்கும் எதுவும் தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
பிறகு உறவினர்கள் அனைவரும் சென்று அவரிடம் எவ்வளவோ அன்பினால் வாதாடியும், அவர், "என் பெயரில் தான் எல்லாம் இருக்கிறது. நான் சொல்வது தான் சட்டப்படி நடக்கும். நான் எக்காரணத்தை கொண்டும் இதை அவர்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டேன். மற்றும் உள்ள மகன்கள், மகள்களின் பேரக் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பொழுது எல்லோருக்கும் தருவதில் ஒரு பங்கு வேணுமானால் அவனின் குழந்தைகளுக்கு தருவேனே தவிர அனைத்தையும் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார்.
இதனால் துன்புற்ற அவரின் மனைவி, மக்கள் தனியாக ஒதுங்கி விட்டனர். அவரின் பிள்ளைகள் டாக்டர், இன்ஜினியர் என்று படித்து வருகிறார்கள். அதற்கான செலவு முழுவதையும் அந்தப் பெண்ணின் தாய் விட்டார்களே கவனித்துக் கொள்கிறார்கள் . இதனால் அந்த பெண்ணிற்கும் மனப்பாரம் அதிகமாகிவிட்டது. என்றாலும், எப்படியோ எல்லாவற்றையும் பொறுத்து சமாளித்து வருகிறார்.
ஆதலால் திருமணமான உடன் மனைவிமார்கள் தன் கணவரின் இன்சூரன்ஸ் போன்ற பண விஷயங்களிலும் தலையிட்டு என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
கணவன்மார்களும் சமைப்பது, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை பார்ப்பது என்பதில் மட்டும் நீ குறியாய் இரு. பண விஷயத்தில் தலையிடாதே. அதை எல்லாம் எனக்கு எப்படி செட்டில் பண்ண வேண்டும் என்பது தெரியும் என்று கூறாமல், மனைவி சொல்வதிலும் உள்ள ஆழத்தை நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஒரு சிலர் நாமினியை நியமிக்காமல் கூட விட்டு விடுகிறார்கள். பிறகு நீதிமன்றத்தின் மூலம் அதை வாரிசுதாரர்கள் பல போராட்டத்திற்குப் பிறகு பெறுவதும் நிகழ்கிறது. ஆதலால் இது போன்ற பொருளாதார விஷயத்தில் நாமினியை நியமிப்பதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.