

உத்தரப் பிரதேச விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குல்வீர்சிங், இந்திய ராணுவத்தில் நாயப் சுபேதாராக பணியாற்றி, புனே ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்று, 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டங்களில் தேசிய சாதனையாளராக உயர்ந்துள்ளார். ஆசிய விளையாட்டுகளில் தங்கம், வெண்கலம் வென்ற அவர், 2026 காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் நீண்ட தூர ஓட்ட வரலாற்றை மாற்றியுள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 28 வயதாகிய இந்திய வீரர் குல்வீர்சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இது காமன்வெல்த் வரலாற்றிலேயே இந்தப் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கமாகும். குல்வீர் 10,000 மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 49.78 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளது பெருமைக்குரிய செயலாகும்.
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் குல்வீர் சிங், தற்போது 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஆகிய இரண்டு நீண்ட தூர ஓட்டங்களிலும் தேசிய சாதனையாளராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாஸ்கோவின் ஸ்காட்ஸ்டோன் ஸ்டேடியத்தில் பெய்த கனமழை மற்றும் ஈரமான தடகளப் பாதையைப் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக ஓடியிருக்கிறார்.
போட்டியின் பெரும்பகுதியில் முன்னணி வீரர்களுடன் இணைந்து ஓடிய குல்வீர், இறுதிச்சுற்றில் தன்னுடைய வேகத்தை அபாரமாக உயர்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டார்.
வழக்கமாக நீண்ட தூர ஓட்டங்களில் கென்யா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளே ஆதிக்கம் செலுத்தும். 1986 காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு, இந்தத் தொடரில் முதல் மூன்று இடங்களுக்குள் ஒரு ஆப்பிரிக்க வீரர் கூட வராதது இதுவே முதல் முறையாகும்.
யார் இந்த குல்வீர்சிங்?
குல்வீர் சிங், சிர்சா கிராமம், அத்ரௌலி, அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் 1/6/1998 இல் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் நாயப் சுபேதார் ஆகப் பணிபுரிகிறார். 'தி கிரெனேடியர்ஸ்' படைப்பிரிவைச் சேர்ந்தவர். புனேவில் உள்ள ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில், பயிற்சி பெற்றவர்.
குல்வீர் சிங்கின் ஆரம்பகால ஒரே கனவு இந்திய ராணுவத்தில் சேருவது மட்டுமே. விளையாட்டுத் துறையில் பெரிய ஆர்வம் இல்லாத அவர், ராணுவத்தில் சேருவதற்கான ஒரு வழியாகவே ஓட ஆரம்பித்தார்.
2018-ல் ராணுவத்தில் சேர்ந்த பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அங்கு நடந்த ஒரு கிராஸ் கண்ட்ரி போட்டியில் சிறப்பாக ஓடி வென்றார். இவரது திறமையைக் கண்ட பயிற்சியாளர் யூனுஸ் கான், இவரை புனேவிற்கு அழைத்து வந்து முறையான தடகளப் பயிற்சி அளித்தார்.
பிறகென்ன! அநேக ஓட்டப் பந்தய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல வென்றுள்ளார்.
2025 இல் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மீட்டர் ஓடி, தங்கப் பதக்கம்;
2022 இல் சைனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் பங்கேற்று 5,000 மீட்டர் ஓடி, வெண்கலப்பதக்கம்;
2023 இல் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 5,000 மீட்டர் ஓடி, வெண்கலப்பதக்கம் என பரிசுகளைப் பெற்றவர்.
காமன்வெல்த் 2026 விளையாட்டுப் போட்டியில், 10,000 மீட்டர் பந்தயத்தில் இவர் பங்கேற்பது குறித்து வீட்டில் ஒருவருக்கும் தெரியாதெனக் கூறும் குல்வீர்சிங், தீவிர பயிற்சியும், மனதில் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்கிறார். சரிதானே!
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு சர்வதேச மேடையிலும் ஆப்பிரிக்க வீரர்களின் ஆதிக்கத்தை முறியடித்து இந்தியர்கள் வரலாற்று சாதனை படைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும், விளையாட்டுத் துறையில் ராணுவ வீரர்களின் பங்களிப்பையும் முழுமையாக உணர்ந்து கொள்வீர்கள்.