சாதனைகளின் நாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்: IPL-லில் இளம் கேப்டன் முதல் உலகக் கோப்பை பங்களிப்பு வரை - பிறந்தநாள் ஸ்பெஷல்!

Shreyas iyer
Shreyas iyerSource: news9live.com
Published on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் சந்தோஷ் ஐயர் மற்றும் ரோகிணி ஐயர் இணையருக்கு 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாளில் ஸ்ரேயாஸ் ஐயர் பிறந்தார். இவரது தந்தை சந்தோஷ் ஐயர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும், மும்பையில் உள்ள ராம்நிரஞ்சன் ஆனந்திலால் போடார் வணிக மற்றும் பொருளாதாரக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

சிரேயாஸ் ஐயரது 18 ஆவது வயதில், சிவாஜி பார்க் ஜிம்கானாவில் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே அவரது திறனைக் கண்டறிந்து அவருக்குத் தொடக்கக் காலக் கிரிக்கெட் பயிற்சி அளித்தார். ஐயரின் வயதுக்குட்பட்ட அணி வீரர்கள் அவரை வீரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டுப் பேசினர். போடார் கல்லூரியில் அவர் படித்து வந்த போது, ​​கல்லூரி அணிக்கு ஆறு கோப்பைகள் கிடைக்கச் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை கிரிக்கெட் சுற்றுகளில் தனது திறமைகளை மெருகேற்றிக் கொண்ட ஐயர், தனது இயல்பான திறமை மற்றும் நேர்த்தியான ஸ்ட்ரோக் ஆட்டத்தால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு முதல் தரப் போட்டியான ரஞ்சி டிராபியின் 2014-2015 ஆண்டுக் காலத்தில் மும்பைக்காக ஷ்ரேயாஸ் அறிமுகமானார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது நிலையான செயல்திறன் அனைவராலும் விரும்பப்பட்டது. இப்போட்டிகளின் போது, அவர் புதிய பாணி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சிறந்த மட்டையாளர் என்ற நற்பெயரை பெற்றார்.

2015 ஆம் ஆண்டு, பிப்ரவரியில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் 2.6 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 439 ஓட்டங்களை (Run) எடுத்தார். இவரின் சராசரி 33.76 ஆகவும், இவரின் ஸ்டிரைக் ரேட் 128.36 ஆகவும் இருந்தது. 2015 ஆம் ஆண்டிற்கான முக்கியமான வீரர்களில் இவருக்கு 9 ஆவது இடம் கிடைத்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் நவம்பர் 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான பன்னாட்டு இருபது20 (டி20) போட்டியில் இந்தியாவுக்காகப் பன்னாட்டு அளவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, அவர் ஒருநாள் அணியில் இடம் பெற்றார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் அவரது திறன் அவரை அனைத்து வகையான ஆட்டங்களிலும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக அடையாளப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
ஜஸ்பிரித் பும்ரா பிறந்தநாள் : தடைகளை தவிடுபொடியாக்கி சாதனை படைத்த இந்திய வேகப்புயல்..!
Shreyas iyer

2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி அணி நிர்வாகம் இவரைத் தக்க வைத்துக் கொண்டது. 2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் 25 அன்று கவுதம் கம்பீருக்குப் பதிலாக இவரை அணி நிர்வாகம் தலைவராக நியமித்தது. இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் குறைந்த வயதில் டெல்லி அணித் தலைவர் ஆனவர்களில் முதலிடத்திலும், ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடத்தையும் பிடித்துச் சாதனையைப் படைத்தார். அப்போது இவருக்கு வயது 23 ஆண்டுகள் 142 நாட்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இவர் முதன்முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகத் தலைவராக விளையாடினார். இந்தப் போட்டியில் சிரேயாஸ் ஐயர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டம் 219 ஆவதற்கு உதவினார். இதில் 10 ஆறு ரன்களும் அடங்கும். இப்போட்டியில், போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தப் போட்டியில் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

2021 ஆம் ஆண்டில் ஏற்பட்டத் தோள்பட்டைக் காயம் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பின்னடைவைச் சந்தித்தார். அதனால் அவர் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு விளையாடாமல் இருந்தார். இருப்பினும், அவர் வலுவான மறுபிரவேசம் செய்தார், இந்திய அணிக்குப் பங்களிக்க தனது மீள்தன்மை மற்றும் உறுதியைக் காட்டினார். இந்தியா நடத்திய 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் பங்கேற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயம் ஏற்பட்டது. கேட்ச் பிடிக்க பின் பக்கம் திரும்பி ஓடிய ஸ்ரேயாஸ், பந்தை பிடிக்கும் கவனத்தில் உடலின் பேலன்ஸை இழந்தார். இதனால் எக்குத்தப்பாக தரையில் விழுந்த ஸ்ரேயாஸ் ஐயர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்தக் காயத்தால் அவருக்கு உள் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.3 நாட்களுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.தற்போது மும்பையில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், 3 மாதங்களுக்கு எந்தவித பயிற்சியையும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு யுஎஸ்ஜி சோதனை செய்யப்படும். அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர் எப்போது பயிற்சியை தொடங்கலாம் என்பது தெரிய வரும்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளைப் போற்றிக் கொண்டாடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com