
ரசிகர்கள் முன்னிலையில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ஐபிஎல் தொடர் பல வீரர்களுக்கு கொடுத்துள்ளது. இதிலிருந்து சில வீரர்கள் இந்திய அணிக்கும் தேர்வாகி உள்ளனர். முன்பெல்லாம் ரஞ்சி டிராபி மற்றும் இராணி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாகி வந்தனர். ஆனால் இன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலே இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றாகி விட்டது. அவ்வகையில் அன்று நூடூல்ஸ் சாப்பிட்டே வளர்ந்த இரண்டு வீரர்கள், இன்று ஐபிஎல் தொடரால் கேப்டன் பொறுப்பை நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களாக மாறியுள்ளனர்.
ஒரு காலத்தில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக கபில்தேவ் ஜொலித்தார். அவருக்குப் பின் யுவராஜ் சிங் அந்த இடத்தை மிகச்சிறப்பாக நிரப்பினார். யுவராஜின் ஓய்வுக்குப் பிறகு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்விக்கு விடையாக வந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், நேர்த்தியான பௌலிங் மற்றும் சிறப்பான ஃபீல்டிங் என தற்போதைய இந்திய அணியில் மிளிர்கிறார்.
ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கிடைத்தது கூட ஐபிஎல் தொடரால் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், திறமையான வீரர்களைத் தேடி உள்ளூர் கிரிக்கெட் தொடர்களைக் காண அடிக்கடி செல்வார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடித்த வீரர்கள் தான் பாண்டியா பிரதர்ஸ்.
க்ருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் முதன்முறையாக சந்தித்த நீதா அம்பானி, 'நீங்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்? எதுவும் சாப்பிட மாட்டீர்களா?' எனக் கேட்டுள்ளார்.
'எங்களது குடும்பம் வறுமையில் சிக்கித் தவிப்பதால், கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நூடுல்ஸை மட்டுமே சாப்பிட்டு வருகிறோம்' என ஹர்திக் பாண்டியா கூறினார்.
இதனைக் கேட்ட நீதா அம்பானி, 'இவ்வளவு வறுமையிலும் கிரிக்கெட் மீதான உங்களின் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்றார்.
பாண்டியா பிரதர்ஸை சந்தித்ததோடு மட்டுமின்றி, 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக இருவரையும் மும்பை அணி 10,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. வறுமையிலும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான், இன்று பாண்டியா பிரதர்ஸ் இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. சாதாரண வீரராக மும்பை அணியில் இணைந்தவர், இன்று மும்பை அணிக்கே கேப்டனாக மாறியிருக்கிறார்.
மும்பை அணி ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு முக்கிய காரணம். அதோடு 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை வகித்த ஹர்திக் பாண்டியா, கோப்பையையும் வென்று கொடுத்தார். இந்திய டி20 அணிக்கு கேப்டனாகவும் சில போட்டிகளில் தலைமை வகித்துள்ளார் பாண்டியா.
2024 இல் டி20 உலகக்கோப்பை மற்றும் நடப்பாண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்துள்ளார். க்ருணால் பாண்டியா இந்திய டி20 அணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் பிடித்திருந்தாலும், தனது இடத்தைத் தக்க வைக்க தவறி விட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.