சில போட்டிகளாக தோனி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தாத நிலையில், அவர் ஓய்வு குறித்தான பேச்சுகள்தான் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
சென்னை அணியின் அடையாளம் என்றால், அது தோனிதான். தோனிக்கு வயதாகி வருவதால், எந்த நேரமும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வு குறித்தான ரூமர்ஸ் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்படியான சமயத்தில்தான் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜுக்கு கொடுத்துவிட்டார். அதுமுதல் அவருக்கு பல விஷயங்களை கற்றுத்தந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அன்கேப்புடு ப்ளேயராக வாங்கப்பட்டார். தனது சம்பளத்தை பெரிய விஷயமாக கருதாமல், முழுதும் ரசிகர்களுக்காகவே விளையாடி வருகிறார்.
சென்னை அணி விளையாடும்போதெல்லாம், தோனி கடைசி 4 ஓவர்களிலேயே களம் இறங்க விரும்புகிறார். அதற்கு முன் இருக்கும் ஓவர்களில் அணியின் வேறு வீரர்களை விளையாட வைக்கிறார். இதனால், விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் தோனி தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வெடுப்பேனா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றது என்று விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
இதுகுறித்து ரசிகர்கள் முதல் கிரிக்கெட் வட்டாரத்தினர் வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீப் பேசுகையில், “தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சக்கட்ட விளையாட்டை வெளிபடுத்தவில்லை என்றால், மதிப்பு குறையதான் செய்யும்.
நீங்கள் 15 ஆண்டுகள் சிறப்பாக விளையாடினாலும், இப்போது சரியாக விளையாடவில்லை என்றால், இளைஞர்கள் மதிக்கப்பட மாட்டார்கள். 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அப்போதே ரசிகர்கள் புரிந்துக்கொண்டிருக்க வேண்டும்.
தோனி வரும்போது ரசிகர்கள் அப்படி கத்தினர். ஆனால், தற்போது சென்னை அணிக்கு புள்ளிதான் முக்கியம். ஆனால், அவர்கள் பட்டியலில் கடைசி இடைத்தில் உள்ளனர். நீங்கள்தான் இது ஏன் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.