
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மாவும் ஒருவர். தொடக்க காலத்தில் இவரது கிரிக்கெட் பயணம் மிகவும் சோதனைகள் நிறைந்ததாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ரோஹித் சர்மா ஒரு ஸ்பின் பௌலராகவே தனது கிரிக்கெட்டைத் தொடங்கினார். இவரது சிறுவயது பயிற்சியாளரின் உதவியால் தான் பேட்டராக மாறி கிரிக்கெட்டையும் தொடர்ந்தார்.
மும்பையில் பிறந்த ரோஹித் சர்மா, குடும்ப சூழ்நிலை காரணமாக தனது சித்தப்பா வீட்டில் தான் வளர்ந்தார். அப்போதே அவருக்கு கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. பள்ளி அளவிலான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று சிறப்பாக விளையாடுவார். பள்ளி மாணவர்களுக்கான ஒரு கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவின் பௌலிங் மற்றும் பேட்டிங் திறமையைக் கண்ட பயிற்சியாளர் தினேஷ் லாட், அவருக்கு மேலும் பயிற்சி வழங்க முன்வந்தார். கிரிக்கெட் பயிற்சியைத் தொடரவும், படிப்பிற்கும் உதவித்தொகை பெற்றுக் கொடுத்து ரோஹித் சர்மாவை மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை தினேஷ் லாட்டையே சேரும்.
தொடக்கத்தில் ஸ்பின் பௌலராக இருந்து ரோஹித் சர்மாவுக்கு, பேட்டிங் பயிற்சியையும் அளித்தார் தினேஷ் லாட். இவரது பயிற்சியின் கீழ் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்ட ரோஹித் சர்மாவுக்கு 2007 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. ஆல்ரவுண்டராக அணியில் இடம் படித்த ரோஹித், 6 அல்லது 7வது இடத்தில் தான் களமிறங்கினார்.
உலகக்கோப்பையை வென்ற அணியில் ரோஹித் இடம் பிடித்திருந்தாலும், அதன்பின் அணியில் தொடர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் நல்ல பேட்டிங் மற்றும் பௌலில் திறனுடன் விளையாடி வந்தார். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க கடுமையாக உழைத்த ரோஹித் சர்மாவுக்கு, தோனியின் கேப்டன்சியால் நிரந்தர இடமே கிடைத்தது. ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறங்கி தோனி அளித்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் ரோஹித். அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவின் சிறந்த தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.
கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் வளர்ச்சியைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “12 வயது சிறுவனாக ரோஹித் என்னிடம் வந்து போது ஒரு பௌலராக இருந்தார். அங்கிருந்து ரோஹித்தை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணிக்கு 2024 டி20 உலகககோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். 2023 ஒருநாள் உலகககோப்பையைத் தவற விட்டதில் வருத்தம் தான். இருப்பினும் ரோஹித் 2027 ஆம் ஆண்டு வரை விளையாடி உலககோப்பையை வென்று தனது கனவையும், நாட்டு மக்களின் கனவையும் நனவாக்க வேண்டும்” என தினேஷ் லாட் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, புல் ஷாட்டுகளை சிறப்பாக விளையாடுவார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 200 ரன்களைக் குவித்துள்ளார். சிக்ஸ் அடிப்பதில் வல்லவரான ரோஹித், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் முன்னணியில் இருக்கிறார்.