
கிரிக்கெட் வரலாற்றில் சமீப காலமாக, வீரர்கள் பலரும் சிக்ஸர்களை அதிகளவில் விளாசுகின்றனர். அதிரடியாக விளையாடுவதே இன்றைய தலைமுறை இளம் வீரர்களின் எண்ணமாக உள்ளது. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை அசாத்தியமாக எதிர்கொள்ளும் வீரர்களால் தான், அதிகளவில் சிக்ஸர்களை விளாச முடியும். அவ்வகையில், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 10 வீரர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
இன்றைய கிரிக்கெட் முறையானது அதிரடி ஆட்டத்தால் தான் பிரபலமடைந்துள்ளது. அதிரடியாக விளையாடினாலும், களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது முக்கியம். அவ்வகையில் அதிரடி வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் இருந்தால், அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரும். இருப்பினும், அனைத்து பந்துகளையும் சிக்ஸராக மாற்ற முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது. பௌலர்களுக்கு எப்படி நல்ல பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களைத் தடுமாற வைப்பது பிடிக்குமோ, அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு ஃபோர், சிக்ஸ் அடிப்பது பிடிக்கும்.
அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியல்:
1.ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அப்ரிடி. தனது அதிரடியான பேட்டிங் மற்றும் அற்புதமான சுழற்பந்து வீச்சால் பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அப்ரிடி, 351 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.
2. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 338 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணிக்குள் நுழைந்த ரோஹித், தற்போது இந்தியாவின் கேப்டனாக உயர்ந்து இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் ரோஹித், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 'ஹிட் மேன்' என்று அழைக்கப்படுகிறார்.
3. அதிரடிக்குப் பெயர் போன வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 331 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாக சிக்ஸ் அடிக்கும் இவரது பேட்டிங் திறன் உலகளவில் பிரபலமானது.
4. இலங்கையின் சனத் ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார். தற்போது இவர் இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராக அணியை வழிநடத்தி வருகிறார்.
5. இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி 229 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
6. இங்கிலாந்து அணிக்கு முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கன், 220 சிக்ஸர்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.
7. சர்வதேச கிரிக்கெட் உலகில் Mr.360 என அழைக்கப்படுபவர் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டமும், பேட்டிங் ஸ்டைலும் உலகம் முழுக்க பிரபலமான ஒன்று. இவர் 204 சிக்ஸர்களுடன் 7வது இடத்தில் இருக்கிறார்.
8. நியூசிலாந்தின் அதிரடி மேட்டர் பிரன்டன் மெக்கல்லம் 200 சிக்ஸர்களுடன் 8வது இடத்தில் இருக்கிறார். இவர் தற்போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.
9. கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 195 சிக்ஸர்களுடன் 9வது இடத்தில் இருக்கிறார்.
10. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 195 சிக்ஸர்களுடன் 10வது இடத்தில் இருக்கிறார்.
இந்த டாப் 10 வீரர்களில் ரோஹித் சர்மா மட்டுமே இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். முதலிடத்தைப் பிடிக்க இன்னும் இவருக்கு 13 சிக்ஸர்களே தேவை என்பதால், விரைவில் முதலிடத்தைப் பிடிப்பார் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்