

சதுரங்க போட்டிகள் என்றாலே அதில் நிச்சயம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிலர் பங்கேற்பது வழக்கமான விஷயம் தான். உலக அளவில் ஏராளமான சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக அளவில் தமிழ்நாட்டிலிருந்தே உருவாகியுள்ளனர். இன்று சதுரங்க போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த டி முகேஷ் , அரவிந்த் சிதம்பரம் , அர்ஜூன் கல்யாண் , பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகியோர் முன்னணி சதுரங்க வீரர்களாக இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான இந்தியாவில் ஏராளமான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
இதற்கெல்லாம் விதை யார் இட்டது என்றால் ? அதற்கு முழுக் காரணம் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவல் ஆரோன் அவர்களை சேரும். தமிழகத்தில் சர்வதேச தரத்தில் சதுரங்க வீரர்களை உருவாக்கவும் , அவர்களை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கவும் 1972 - ஆம் ஆண்டு ஆரோன், சென்னையில் சோவியத் கலாச்சார மையத்துடன் இணைந்து தால் செஸ் கிளப்பை நிறுவினார். இந்த சதுரங்க பயிற்சி கிளப்பில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல சதுரங்க வீரர்கள் பயிற்சி பெற்றனர்.
1988 இல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார் , அதைத் தொடர்ந்து 5 முறை செஸ் உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சர்வதேச அளவில் சதுரங்க போட்டிகளில் தனது வலிமையான ஆதிக்கத்தை நிலை நிறுத்தி , இந்தியாவின் பெயரினை உயர்த்தினார்.
ஆனந்தின் புகழ் சர்வதேச அளவில் பரவியது. அதன் பின்னர் சதுரங்க போட்டிகள் மீதான ஆர்வம் தமிழகத்தில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகத்தில் ஏராளமான சதுரங்க பயிற்சி அகடமிகள் தோன்றின. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சதுரங்க விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கு முன்னுதாரணமாக, நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் சுப்பராமன் விஜயலட்சுமி இருந்தார். தற்போது வைஷாலி செஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக பெண்ணாக இருக்கிறார்.
இந்தியாவில் உள்ள 83 கிராண்ட் மாஸ்டர்களில் 29 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்திய கிராண்ட்மாஸ்டர்களில், 35% பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இளம் வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவரின் சர்வதேச புகழ் , தமிழகத்திலிருந்து ஏராளமான சதுரங்க வீரர்கள் உருவாவதற்கு உந்துதலாக இருந்தது. சதுரங்க போட்டிகள் முதன் முதலாக இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுவது உண்டு , அதே நேரம் தமிழகத்தில் அது புராணங்களோடு தொடர்பு உடையது.
திருவாரூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோயில் சதுரங்க விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றியதற்கு ஆதாரமாக இருக்கிறது. இந்தக் கோயிலின் இறைவன் பெயர் கூட சதுரங்கத்தில் தொடங்குகிறது. இவர் பார்வதிதேவியின் அவதாரமான ராஜராஜேஸ்வரியை சதுரங்க விளையாட்டில் வென்று திருமணம் செய்துக் கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது.
இன்று இந்தியாவில் ஏராளமானோர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளனர் , அதில் 35% பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, வேறு எந்த இந்திய மாநிலமும் செஸ் விளையாட்டிற்கு இவ்வளவு பெரிய பங்களிப்பை வழங்க வில்லை.
தமிழக அரசு தொடர்ச்சியாக சதுரங்க வீரர்களை ஆதரித்தது, சதுரங்க விளையாட்டுகளுக்கு தொடர் ஆதரவும் கொடுத்தது. தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் (TNSCA), தமிழ்நாடு விளையாட்டு அபிவிருத்தி ஆணையம் மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புடன் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களினால் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் சதுரங்க விளையாட்டின் தலைநகராக தமிழகம் உள்ளது.