சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ அணியில் வாங்கப்பட்டார். அந்தவகையில் லக்னோ அணி உரிமையாளர் ரிஷப் பண்டை தேர்ந்தெடுத்தது குறித்து பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர். 10 அணிகள் மொத்தம் 46 வீரர்களைத் தக்கவைத்தனர். இதனையடுத்து 182 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். பிறகு ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில், 320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள். அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மெகா ஏலம் 182 வீரர்களுக்காக கிட்டத்தட்ட 639.15 கோடியை 10 அணிகளின் உரிமையாளர்கள் செலவிட்டு வாங்கியுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடி எல்.எஸ்.ஜி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டை தேர்வு செய்தது குறித்துப் பேசியுள்ளார்.
அதாவது, “2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டதாக கூறி நடித்தது எனக்கு பிடித்திருந்தது. இதனால் ஆட்டத்தின் வேகம் தடைப்பட்டது. அதற்கு பிறகு எல்லாம் அந்த அணிக்கு எதிராக மாறியது. அப்பொழுதே அவர் என் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என நான் யோசித்தேன். இதுதான் அவரை வாங்க முக்கிய காரணம்.
மேலும் இப்போது அவர் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் சாலை விபத்தில் சிக்குவதற்கு முன்பு இருந்ததை விட மிகவும் சிறப்பான முறையில் ஃபார்முக்கு வந்திருக்கிறார். இவரின் இந்த கம்பேக்கே அவரை வாங்கத் தூண்டியுள்ளது.” என்று பேசினார்.