சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 18-வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பி.வி. சிந்து, 119-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வூ லு யுவை எதிர்கொண்டார். களத்தில் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டிய சிந்து முதல் செட்டை சிரமமின்றி கைப்பற்றினார். 2-வது செட்டில் கடும் சவால் அளித்த வூ லு ஒரு கட்டத்தில் 11-10 என முன்னிலை வகித்தார். இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட சிந்து 5 புள்ளிகளை தொடர்ச்சியாக வசப்படுத்தி மீண்டெழுந்தார்.
47 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வூ லுவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். 2 ஆண்டுக்கு மேலாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் இருந்த சிந்து அந்த ஏக்கத்தை தணித்துள்ளார். கடைசியாக அவர் 2022-ம் ஆண்டு ஜூலையில் சிங்கப்பூர் ஓபனை வென்றிருந்தார். சையத் மோடி பட்டத்தை சிந்து உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2017-ம், 2022-ம் ஆண்டுகளிலும் இங்கு மகுடம் சூடியிருந்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துக்கு ரூ.13¼ லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற பின்னர் இந்திய வீராங்கனை 29 வயதான பி.வி.சிந்து கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும். மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன். காயமின்றி முழு உடல்தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். அது தான் எனது பிரதான இலக்கு. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (2028-ம் ஆண்டு) இன்னும் நிறைய காலம் உள்ளது. நிச்சயம் அதில் விளையாடுவேன். அதே நேரம் காயம் ஏதும் அடையாமல் இருக்க வேண்டும். உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் ஏன் அடுத்த ஒலிம்பிக்கில் விளையாட முடியாது? ’ என்றார்.
மேலும் சிந்து கூறுகையில், ‘வெற்றியோடு இந்த சீசனை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, ஜனவரியில் இருந்து மீண்டும் பயிற்சியை தொடங்குவேன்’ என்றார்.