கடந்த மாதம் கவுதம் கம்பீர், “இதுவரை பெங்களூரு அணி எதுவுமே செய்யவில்லை. ஆனால், தெனாவெட்டுடன் இருக்கின்றனர்.” என்று பெங்களூரு அணி குறித்து பேசியது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு அணி ஐபிஎல் தொடர் ஆரம்பமான காலத்திலிருந்து தற்போது வரை ஒருமுறை கூட கப் அடிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து தனது முயற்சியை அளித்து வரும் பெங்களூரு அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுவும், பெங்களூரு அணி தோற்றால் அவர்களுக்கு ஆறுதலாகவும், வெற்றிபெற்றால் அணியின் வீரர்களைக் கொண்டாடுவதும் என நன்மை தீமை என இரண்டிலுமே நிலைத்து நிற்கும் ரசிகர்கள் பெங்களூரு அணிக்கே உள்ளனர்.
ஒவ்வொருமுறையும் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும், பெங்களூரு அணி ரசிகர்கள் அடுத்த முறை வெற்றிபெறுவோம் என்ற பாசிட்டிவ் எண்ணத்துடன் அணிக்குத் துணையாக இருப்பார்கள்.
அப்படியிருக்க, நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி, இந்த முறையும் கப்பை வெல்லாது என்று பலரால் கூறப்பட்டது. ஆனால், கடைசி லீக் போட்டியில் ஒரு சதவீத வெற்றி வாய்ப்புடன் களமிறங்கி, சென்னை அணியை வீழ்த்தி 99 சதவீத வெற்றி வாய்ப்பைத் தன் வசப்படுத்தியது பெங்களூரு அணி. இதனால் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தநிலையில் தற்போது கவுதம் கம்பீர் பெங்களூரு அணி குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, “ஒரு அணியை எப்போதும் வீழ்த்த வேண்டும், என் கனவிலும் வீழ்த்த வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றால், அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான்.
ஐபிஎல் அணிகளிலேயே இரண்டாவது பெரிய (பணக்கார) அணி பெங்களூரு அணி. அவர்கள் அணியிலும் பெரிய வீரர்கள் உள்ளனர். கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ். உண்மையில் அவர்கள் எதையும் ஜெயிக்கவில்லை. ஆனால், எல்லாவற்றையும் வென்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தெனாவெட்டான மனப்பான்மையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை." என்று அவர் பேசியதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையில் வாக்குவாதங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் இருவரும் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது, பெங்களூரு அணியின் வெற்றிக்கு பிறகு, கவுதமின் இந்த கருத்துப் பகிரப்படுவது மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டியை வலுப்படுத்துகிறது என்றே கூற வேண்டும்.