இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ருத்துராஜ் தனது கேப்டன்ஸி பதவி பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இன்று சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சென்னை அணியின் நிர்வாகம் ஒரு திடீர் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதாவது சென்னை அணியின் கேப்டனாக இனி ருத்துராஜே செயல்படுவார் என்று அறிவித்தது. இதனையடுத்து தோனி அணியில் விளையாடுவார் என்றும் ருத்துராஜுக்கு ஆலோசகராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை அணியில் இடையில் ஒருமுறை இவ்வாறுதான் கேப்டன்ஸி மாற்றப்பட்டது. அப்போது சென்னை அணி மோசமாக விளையாடியதால் இந்தமுறை தோனி ருத்துராஜுக்கு கேப்டன்ஸி யுக்திகளைக் கற்றுக்கொடுத்துவிட்டு அடுத்த வருடம் தனது ஓய்வறிவிப்பை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ருத்துராஜ் சென்னை அணிக்காக சுமார் 52 போட்டிகள் விளையாடியிருக்கிறார். சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவர் 590 ரன்கள் எடுத்து சென்னை அணித் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக ஆனார். அதேபோல் 2021ம் ஆண்டு ருத்து வெறும் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்களைக் குவித்து அந்தத் தொடருக்கான ஆர்ஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இவர் மகாராஷ்டிரா அணிக்குக் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
அதேபோல் இந்திய டி20 அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்று தங்கப்பதக்கத்தையும் பெற்றுத் தந்திருக்கிறார். இதனையடுத்து ருத்துராஜ் சென்னை அணியின் கேப்டனாகப் பதவியேற்றதையடுத்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“இந்தப் பதவியை நான் பெருமையாக நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியில் தோனி, ரஹானே, ஜடேஜா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் அனைவருமே கேப்டனாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் என்னை வழிநடத்துவார்கள். எனக்கு எதை நினைத்தும் கவலையில்லை. ஆகையால் இந்தப் பொறுப்பை நான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்கப் போகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தோனி கேப்டனாக இல்லையென்றாலும் அவரது பேட்டிங்கைப் பார்க்கும் உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் ருத்துராஜ் எப்படி அணியை வழிநடத்துகிறார் என்பதையும் இன்றைய ஆட்டத்தில் பார்த்துவிடலாம்.